கொடைக்கானலில் கார் விபத்து: ஒருவர் பலி!

புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கேரளாவில் இருந்து கொடைக்கானல் வந்த இளைஞர்களின் கார் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த ஜிபின், மனு ஆண்டனி, அனீஸ், அப்துல், விஷ்னு, சச்சின் உட்பட ஏழு இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகக் கொடைக்கானலுக்கு காரில் சென்றுள்ளனர்.
இன்று (டிசம்பர் 31) காலை சவரிக்காடு என்ற இடத்துக்கு அருகே கார் சென்று கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோரத்தில் இருந்த தடுப்பை உடைத்துக் கொண்டு 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. காரை ஓட்டி வந்தவர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கொடைக்கானல் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து மீட்பு படையினருடன் வந்த காவல்துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மீதமுள்ள 6 பேரில் நான்கு பேரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இரண்டு பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மலைப்பகுதியில் கார் உருண்டு விழுந்ததால் மீட்புப் பணிகளில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
சவரிக்காடு பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.