விஸ்வாசம் டிரெய்லர் நிகழ்த்திய சாதனை!

பேட்ட திரைப்படம் பொங்கல் ரேஸில் தாமதமாக வந்து இணைந்தாலும் புரொமோஷன் பணிகளில் வேகம்
காட்டியது. ஆனால் பொங்கல் ரிலீஸ் என்பதைப் பல மாதங்களுக்கு முன்பே உறுதிப்படுத்திய விஸ்வாசம் பலமான போட்டி உருவான பின்னரும் புரொமோஷன் பணிகளில் தீவிரம் காட்டவில்லையே என்று கூறப்பட்டது. பேட்ட டிரெய்லர் கவனம் பெற்ற பின்னர் விஸ்வாசம் டிரெய்லருக்கு அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. அந்த எதிர்பார்ப்பை டிரெய்லர் பூர்த்தி செய்திருப்பதோடு சில சாதனைகளையும் படைத்துக்காட்டியுள்ளது.
சமூக வலைதளங்களில் முழு வீச்சில் இயங்கும் அஜித் ரசிகர்கள் டிரெய்லர் வெளியான சில மணிநேரங்களில் யூ டியூப்பில் டிரெண்ட் ஆக்கினர். சுமார் 10 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற, முதல் தென்னிந்திய திரைப்படத்தின் டிரெய்லர் இதுதான். மேலும் அதிவேகமாக பத்து லட்சம் லைக்ஸ் பெற்ற இந்திய திரைப்படத்தின் டிரெய்லரும் இதுதான்.
டிசம்பர் 27ஆம் தேதி வெளியான பேட்ட படத்தின் டிரெய்லர் நான்கு நாள்களில் சுமார் 1 கோடியே 50 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ள நிலையில் விஸ்வாசம் டிரெய்லர் ஒரே நாளில் ஒரு கோடியே 21 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
பேட்ட டிரெய்லரில் இடம் பெற்ற “எவனுக்காது பொண்டாட்டி, பிள்ளை செண்டிமெண்ட் இருந்தா அப்டியே ஓடிப்போயிரு. மவனே கொலை காண்டுல இருக்கேன். கொல்லாம விட மாட்டேன்” என்ற ரஜினி பேசும் வசனம் பரவலாக கவனம் பெற்றது.
விஸ்வாசம் டிரெய்லரின் இறுதியில், “பேரு தூக்கு துரை. ஊரு கொடுவிலார் பட்டி. பொண்டாட்டி பேரு நிரஞ்சனா, பொண்ணு பேரு ஸ்வேதா. ஒத்தைக்கு ஒத்தை வாடா” என்ற அஜித் பேசும் வசனம் பேட்ட ட்ரெய்லருக்கு பதிலளிக்கும் விதமாக இருப்பதாக அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர்.
இரு படங்களிலும் இடம்பெற்றுள்ள காட்சிகள் எதிர்பாராத விதமாக பேட்ட - விஸ்வாசம் போட்டியை வேகப்படுத்தியுள்ளன.

No comments

Powered by Blogger.