விமானத்தில் இந்தியர் நிர்வாணம்!

துபாயில் இருந்து லக்னோ வந்த விமானத்தில் பயணித்த இந்தியர் ஒருவர் நடுவழியில் ஆடைகளைக் களைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பணியிடத்தில் இருந்த பாகிஸ்தானியர்களால் ஏற்பட்ட மன அழுத்தத்தினால், அவர் இவ்வாறு செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் (டிசம்பர் 29) உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் தரையிறங்கிய ஏர் இந்தியா ஐஎக்ஸ் – 194 விமானத்தில் இருந்த பயணி ஒருவர், அங்கிருந்த விமானநிலைய ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். துபாயில் இருந்து லக்னோ வந்த விமானத்தில் பயணித்த அந்த நபரின் பெயர் சுரேந்திரா. நடுவழியில் தனது ஆடைகளைக் களைந்துவிட்டு, விமானத்துக்குள் அவர் நிர்வாணமாக நடந்துள்ளார். விமானப் பணியாளர்கள் அவரை அமரவைத்து சாந்தப்படுத்தியுள்ளனர். அவரது வயது 33. “அவர் நிர்வாணமாக நடக்கத் தொடங்கியதுமே விமானப் பணியாளர்கள் ஒரு போர்வையைக் கொண்டு அவரை மூடினர். அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் அவர் திமிறினார். ஆனாலும், அவரை அமுக்கிவிட்டனர்” என்று கூறினார் அந்த விமானத்தில் இருந்த பயணி ஒருவர். அதன்பின் அவரை வலுக்கட்டாயமாக இருக்கையில் அமரவைத்து அழைத்து வந்திருக்கின்றனர் ஏர் இந்தியா ஊழியர்கள்.
ஏர் இந்தியா பொறுப்பாளரான ஷகீல் அகமது பேசுகையில், விசாரணையில் பாகிஸ்தானைச் சேர்ந்த சக ஊழியர்களால் அவர் துன்புறுத்தப்பட்டது தெரிய வந்ததாகக் கூறினார். “பணியிடத்தில் இருந்த பாகிஸ்தானியர்களுக்கு மத்தியில் இருந்த ஒரே இந்தியர் அவர் தான். அங்கிருந்த பாகிஸ்தானியர்கள் இரக்கமே இல்லாமல், அவரை அடித்துத் துன்புறுத்தியிருக்கின்றனர். திரும்பிப் போ என்று கூறி அடித்திருக்கின்றனர். இதனால் அவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பியதாகக் கூறினார். சில மணி நேரம் கழித்து, அந்த நபர் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்தார். அவரது ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்த பிறகு, குடும்பத்தினரிடம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்டார். அவரது பெயர் கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார் ஷகீல்.
அந்த விமானம் பாகிஸ்தான் செல்கிறதோ என்ற பயத்தில், சுரேந்திரா தன்னை நிர்வாணப்படுத்திக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.