யாழ்.பொன்னாலையில் கற்றாழைகளை கடத்த முற்பட்டவர்கள் இளைஞர்களால் மடக்கிப்பிடிப்பு

யாழ்.பொன்னாலை கடற்கரை பகுதியில் அனுமதியின்றி கற்றாழைகளை பிடுங்கியவர்களை இளைஞர்கள் ஒன்றிணைந்து விரட்டியடித்துள்ளனர்.


யாழ்.பொன்னாலை கடற்கரை பகுதிகளில் காணப்பட்ட கற்றாழைகளை  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தென்னிலங்கையை சேர்ந்த சிலர் பிடுங்கி, தமது பட்டா ரக வாகனத்தில் ஏற்றிக்கொண்டுசெல்ல முற்பட்டுள்ளனர்.
அதனை அவதானித்த சில இளைஞர்கள் அது தொடர்பில் வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் பொன்ராசாவுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பிரதேச சபை உறுப்பினர் மற்றும் மேலும் சில இளைஞர்கள், கற்றாழைகளை பிடுங்கியவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதன்போது தாம் அனுமதி பெற்றே கற்றாழைகளை பிடுங்குவதாக அவர்கள்  தெரிவித்துள்ளனர். அனுமதி பத்திரத்தை காட்டுமாறு கேட்ட போது அதனை காட்டமையால், அவர்கள் பிடுங்கி ஏற்றிய கற்றாழைகளை பறிமுதல் செய்த இளைஞர்கள் அவர்களை கடுமையாக எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதன் போது கருத்து வெளியிட்ட பிரதேச சபை உறுப்பினர் பொன்ராசா, ”வெளியிடங்களிலிருந்து எமது பிரதேசங்களுக்கு வந்து எமது வளத்தை சூறையாட நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். அது தொடர்பில் மக்களும் விழிப்பாக இருக்க வேண்டும். இனிவரும் காலத்தில் எமது பிரதேச வளங்களை சூறையாட முயற்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.