365 நாட்கள் வகுப்பு நடத்தும் தனியார் கல்வி நிறுவனங்கள் சாதித்தது என்ன?

மாணவர்களின் குழந்தைப் பராயத்தை பலி கொடுக்க முடியாது

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் உள்ள மாணவர்களின் சுவாத்தியம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் தனியார் நிறுவனங்களின் கல்வி நடவடிக்கைகளில் மாநகர சபை தலையிட்டுள்ளது.



மார்கழி மாதத்தில் குறிப்பிட்ட காலப் பகுதியில் மாணவர்களுக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் விடுமுறை வழங்க வேண்டும் என்று அது உத்தரவிட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் அரசாங்க கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு வழமையாகவே விடுமுறை வழங்குவது வழக்கம்.
அத்துடன், தனியார் கல்வி நிறுவனங்கள் தமது கல்வி கற்பிக்கும் நிலையங்களில் சுவாத்திய நிலையை உறுதி செய்த பின்னர் மீண்டும் கல்வி நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்றும் தீர்மானத்தை மாநகர சபை நிறைவேற்றியுள்ளது.

இது சரியா, தவறா என்று பலதரப்பிடம் அரங்கம் ஆசிரிய பீடம் பேசியது. பத்திரிகையின் ஆசிரியர் என்ற வகையில் எனக்கு தனிப்பட்ட அபிப்பிராயம் இந்த விடயத்தில் இருக்கின்ற போதிலும், எனது தனிப்பட்ட முடிவு இந்த விடயத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்ற காரணத்துக்காக, பல தரப்பிடமும் கலந்தாலோசித்த பின்னரே இந்தக் குறிப்பை நான் இங்கு எழுதுகின்றேன்.

மாநகர சபையின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பலரும் பாராட்டவே செய்திருக்கிறார்கள். க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிந்தவுடன் உடனடியாக தனியார் கல்வி நிறுவனங்கள் நடவடிக்கையை ஆரம்பிப்பதை அதிகமான பெற்றோர் எதிர்க்கிறார்கள். இது அந்தக் கல்வி நிறுவனங்கள் பணம் சேர்ப்பதை மனதில் கொண்ட நடவடிக்கை என்றே அவர்கள் விமர்சிக்கிறார்கள்.

இந்த விடயத்தில் மாநகரசபையின் இந்த நடவடிக்கையை எதிர்க்கும் மிகச்சிறிய தரப்பு கூறும் வாதம், ‘உயர்தர பரீட்சைக்கான போட்டி காரணமாக ஏனைய பகுதி மக்களோடு போட்டி போட வேண்டியுள்ளது மற்றும் பாடத்திட்டத்தை முடிக்க கால அவகாசம் போதாது’ என்பவையாகும்.

ஆனால், இந்த வாதங்களை ஆதரிக்க எம்மால் முடியவில்லை. பாடத்திட்டத்தை முடிக்க கால அவகாசம் போதாது என்றால் அதனை மாற்ற அல்லது குறைக்க முயற்சிக்க வேண்டும். அதற்கு உரிய திட்டம் வேண்டும். அதைவிடுத்து மாணவர்கள் மீது  எதனையும் திணிக்க முயல்வது ஆபத்து. மாணவர்கள் என்பவர்கள் உண்மையில் அரைக் குழந்தைகள். அவர்களது குழந்தைப் பராயத்தை மதிக்க வேண்டும். அது போதுமான நிதானமாக, நின்மதியாக கழிய வேண்டியது அவசியம். இப்படியான திணித்தல்கள், அளவுக்கு அதிகமான கல்வி உட்புகுத்தல்கள் அவர்களை வேதனைக்கு உள்ளாக்கும். உண்மையில் அப்படிச் செய்வது ஒரு வகையில் மனித உரிமை மீறலும் கூட.

இன்னுமொரு விடயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. மாணவர்கள் மத்தியில் விளையாட்டு மற்றும் ஏனைய உடற்பயிற்சிக்கான நடவடிக்கைகள் குறைந்து போய்விட்டன என்பது இன்னுமொரு குற்றச்சாட்டு. இதனையும் தவிர்க்க வேண்டும். இதற்காக வாரத்தில் ஒருநாளாவது கட்டாயமாக மாணவர்களுக்கு ஓய்வுநாளாக ஒதுக்கப்பட வேண்டும்.

தனியார் வகுப்புகளின் ஆசிரியர்கள் இந்த தனியார் வகுப்புகள் மூலம் (இவர்களில் பெரும்பாலானோர் அரச பள்ளிக்கூடங்களிலும் கற்பிப்பவர்கள்) லட்சக் கணக்கில் பணம் சம்பாதிக்கின்றார்கள் என்றும் ஆகவே அதனை அவர்கள் இழக்க விரும்பாமையே, 365 நாளும் வகுப்புகளை வைக்க அவர்களை தூண்டுகின்றது என்றும் குற்றச்சாட்டு உண்டு. அதற்காக மாணவர்களின் குழந்தைப் பராயத்தை பணயம் வைக்க முடியாது.

அடுத்தது அரசாங்க மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் வகுப்புக்களில் மாணவர்களுக்கு சுவாத்தியமான இடங்களை ஒதுக்குதல் சம்பந்தப்பட்ட விடயம். இங்கு மட்டக்களப்பு மாநகரிலேயே தகரக் கொட்டகைகளில் வகுப்புக்கள் நடப்பதை நான் பார்த்திருக்கின்றேன். இந்த காற்றோட்டம் இல்லாத தகரக் கொட்டகை வகுப்புக்கள் மாணவர்களை வாழ் நாளைக்கு சுகவீனமுற்றவர்களாக மாற்றிவிடும் ஆபத்தானவை. அது கல்விக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையே. இவை அகற்றப்பட வேண்டும் அல்லது அப்படியான கல்வி நிறுவனங்கள் தடை செய்யப்பட வேண்டும். இந்த வசதிகளில் குட்தண்ணீர் மற்றும் மலசல கூட வசதிகளும் அடக்கம்.

அடுத்தது ஏனைய பகுதி மாணவர்களுடன் போட்டி போட வேண்டியுள்ளதே என்ற விவகாரம். உண்மைதான். போட்டிப் பரீட்சை அதீத பிரச்சினையாக உருவெடுத்துள்ளமை உண்மையே. ஆனால், இவ்வளவு நாளும் அளவுக்கு அதிகமான நாட்கள் ரியூசன் நடத்தி, அளவுக்கு அதிகமான தொகையை கட்டணமாகச் செலுத்தி, எந்த அளவுக்கு மட்டக்களப்பு மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியை இந்த தனியார் நிறுவனங்களால் அதிகரிக்க முடிந்திருக்கின்றது என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கின்றதா?

அதுமாத்திரமல்ல, இன்னுமொரு அடிப்படைக் கேள்வியும் இங்கு இருக்கிறது. பல கோடி ரூபாய்கள் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து, மிகப்பெரிய ஒரு கல்வித்திணைக்களத்தை உருவாக்கி, அதன் மூலம் இலவசமாக மாணவர்களுக்கு கல்வி வழங்க ஏற்பாடு செய்தும், இந்த இலவசக் கல்வி பெறும் அனைத்து மாணவர்களும் தனியார் ரியூசன்களுக்கு சென்றால்தான் பரீட்சையில் வெற்றி பெற முடியுமென்றால், இந்தக்கல்வித்திணைக்களத்தின் நடவடிக்கை அடிப்படையிலேயே தோல்வி என்று ஆகிவிடாதா? இந்த அடிப்படைப் பிரச்சினையை தீர்க்க ஏன் இவ்வளவு நாளும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் மாநகர சபைக்கு இருக்கக்கூடிய அதிகாரம் மிகக்குறைவாகும். கல்வித்திணைக்களத்துக்குத்தான் அது தொடர்பில் அதிக அதிகாரம் இருக்கிறது. ஆனால், தனியார் வணிக நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்ட மிகச் சிறு அதிகாரத்தை வைத்துக்கொண்டே மாநகர சபை இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியுமென்றால், இது மாதிரியான விடயங்களில் அதிக அதிகாரத்தைக் கொண்ட கல்வியமைச்சும், கல்வித்திணைக்களமும் திட்டமிட்டுச் செயற்பட்டால் இன்னும் எவ்வளவோ அதிகமான சாதகமான தாக்கத்தை மாணவர்களின் கல்வியில் ஏற்படுத்தலாமே. மாநகர சபை நடவடிக்கையை நாமும் எச்சரிக்கையுணர்வுடன் பாராட்டுகின்றோம். கல்வி அமைச்சு தனது திட்டங்களை மேம்படுத்தி மாற்றங்களை கொண்டு வரட்டும்.

இறுதியாக, இப்படியான கட்டுரையை எழுதுவதால் தனியார் கல்வி நிலையங்கள் “அரங்கம் செய்திகள்” பத்திரிகையின் மீது கோபம் கொள்ளலாம். எமக்கு விளம்பரங்களை வழங்குவதை அவை தவிர்க்கலாம். அதற்காக மக்களுக்கு நல்லது என்று பட்டதை நாம் சொல்லாமல் இருக்க முடியாது. இனியும் அதைக் கடுமையாகச் சொல்லவே செய்வோம். அதனையும் தாண்டி நல்ல இதயம் கொண்ட தனியார் கல்வி நிறுவனங்கள் இருக்குமாயின் அவை எமக்கு விளம்பரங்களை தரட்டும். அவை போதும்.

அன்புடன்

சீவகன் பூபாலரட்ணம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.