ட்ரோன்: இனி பறந்து வரும் டெலிவரி!

‘சாரி, டிராஃபிக் ஆனதால டெலிவரி லேட்’ என்ற வார்த்தையை இன்னும் சில ஆண்டுகளில் கேட்கமுடியாது. அழிந்து போன வாக்கியத்தின் பட்டியலில் அதனை சேர்த்துவிடலாம் எனும் வகையில் புதிய சர்வீஸைத் தொடங்கியிருக்கிறது ‘Wing' நிறுவனம்.

ஆஸ்திரேலியாவில் சோதனை முயற்சியாக இருந்த ‘ட்ரோன் டெலிவரி’ சர்வீஸை, 2019ஆம் ஆண்டில் தொடங்குகிறது விங் நிறுவனம். ‘Alphabet Umbrella' நிறுவனத்தின் மூலம் கடந்த ஜூலை மாதம் காப்புரிமை பெறப்பட்டது. ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் இலவசமாக இருந்துவந்த ட்ரோன் டெலிவரியை பின்லாந்தில் முதல்முதலாக அதிகாரப்பூர்வமாக தொழிலுக்கு அழைத்து வருகின்றனர்.
ஒன்றரை கிலோ எடையுள்ள பொருட்களை சுமந்துசெல்லும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ட்ரோன்கள் மூலம் 10 கிலோமீட்டர் சுற்றளவுக்கு டெலிவரி செய்யலாம் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்கள்கள் அதிகம் இருப்பதால், சாதாரணமாகவே ட்ரோன்களைப் பறக்கவிட அதிக கட்டுப்பாடுகள் இருக்கின்றன. எனவே, இந்த முயற்சியை அங்கே செய்வதில் அதிக கட்டுப்பாடுகள் இருந்ததால் பின்லாந்தில் அறிமுகம் செய்ய முடிவெடுத்திருப்பதாகக் கூறியிருக்கிறார் Wing நிறுவனத்தின் CEO ஜேம்ஸ் ரயான் பர்கஸ்.
“பொருளை வாங்குபவர் பணம் கொடுக்கவேண்டுமா, விற்பவர் பணம் கொடுக்கவேண்டுமா? என்ற கேள்வியால் இத்தனை நாட்களும் இலவசமாக இதனைச் செய்துவந்தோம். ஆனால், இனி பணம் பெறப்படும். ஆனால், அந்தப் பணமும் ஒற்றை இலக்க டாலர்களிலேயே தான் இருக்கும். மருந்து வாங்குவது, காஃபி வாங்குவது போன்ற எளிய வேலைகளுக்காக டெலிவரி செய்பவர் சாலையில் எவ்விதமான ரிஸ்க்கும் எடுக்கவேண்டாம் என்பதே எங்கள் எண்ணம்” எனத் தெரிவித்திருக்கிறார் பர்கஸ்.
Powered by Blogger.