ஆடம்பரக் கடைகளுக்கு அதிகரிக்கும் வாய்ப்பு!

இந்தியாவில் ஆடம்பர சில்லறை வர்த்தக கடைகளின் எண்ணிக்கை அடுத்த சில ஆண்டுகளில் அதிகரிக்குமென்று டெஸ்கோ நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சில்லறை வர்த்தக நிறுவனமான டெஸ்கோவுக்கு சொந்தமான டுன்ஹம்பி தரவு நிறுவனத்தின் ஆய்வறிக்கையில், ‘இந்தியாவில் ஆடம்பரக் கடைகளுக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் உள்ளது. மிகவும் தூய்மையான, ஆடம்பரமான சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு இந்தியாவில் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. ஒட்டுமொத்த இந்திய சில்லறை வர்த்தகம் ஆண்டுக்கு 20 விழுக்காடு வளர்ச்சி கண்டு வருகிறது. 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் சில்லறை வர்த்தக நிறுவனங்களின் மதிப்பு 1 லட்சம் கோடி டாலராக உயரும்’ என்று கூறப்பட்டுள்ளது.
டுன்ஹம்பி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கில்லாம் பேகுவியர் அண்மையில் இந்தியா வந்திருந்தார். அப்போது அவர் இந்தியாவின் சில முக்கிய சில்லறை வர்த்தக நிறுவனர்களுடன் உரையாடியுள்ளார். சில்லறை வர்த்தகத்தை விரிவுபடுத்தவும், தரவு ஆய்வுகளை மேம்படுத்தவும் இந்த உரையாடல் நடத்தப்பட்டுள்ளது. அப்போது அவர் கூறுகையில், “உலகின் 10 முன்னணி தரவு பகுப்பாய்வுச் சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. டுன்ஹம்பி இந்தியாவில் முதலீடு செய்துள்ளது. இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 10 விழுக்காடு கூடுதலான வேலைவாய்ப்புகளை இந்தியாவில் உருவாக்குவோம். ஆராய்ச்சி & மேம்பாட்டு மையமானது ஆண்டுக்கு 25 விழுக்காடு வளர்ச்சி காணும்” என்றார்
Powered by Blogger.