கடவுளாக இருந்தாலும் விளையாடுங்கள் தோனி

2004ஆம் ஆண்டு தேசிய அணியில் இடம்பெற்றது முதல், இரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை, எந்த டி-20
போட்டியிலும் தோனியின் பெயர் இடம்பெறாமல் இருந்ததில்லை. அவராக ஓய்வெடுத்த காலம்கூட உண்டு. ஆனால், நீங்கள் காத்திருங்கள் என அவர் பெயரை எடுத்தது கிடையாது. ‘இந்த 14 வருடமும் தனது கிரிக்கெட்டை மிகச் சாதூர்யமாகப் பயன்படுத்தி வந்த தோனி, தன்னை ஓரமாக உட்கார வைக்கும்போது எத்தனைக் கடுமையாக உழைத்திருக்கவேண்டும்?’ என்ற ஆதங்கத்தில் கேட்கவில்லை என்றாலும், “தேசிய அணியில் இல்லையென்றால், உள்ளூர் போட்டிகளில் விளையாடமாட்டார்களா?” என சுனில் கவாஸ்கர் கேட்டிருக்கும் கேள்வி நியாயமானது தான்.
சச்சினின் சுயசரிதையில், தனது ஓய்வு குறித்து அறிவித்தபின் நடைபெற்ற போட்டிக்காக எவ்வளவு கடுமையாக உழைத்தார் என்பதைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறார். இதை மேற்கோள் காட்டியே தோனியின் செயல் எத்தனை பலவீனமானது என்பதைக் குறிப்பிட வேண்டியதிருக்கிறது. அக்டோபர் 2018இல் கிரிக்கெட் விளையாடிய தோனி, இனி 2019 ஜனவரியில் நடைபெறும் ஒருநாள் போட்டியில் தான் விளையாடப்போகிறார். இடைப்பட்ட இரண்டு மாதங்கள் அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமே எனக் கேட்பதற்கு சச்சின், திராவிட் போன்றவர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடியதைக் குறிப்பிடத் தேவையில்லை. காரணம், அவர்கள் காலம் வேறு என்ற பதில் கிடைக்கலாம்.
தோனி போன்ற வீரர்கள் எப்போது பேட் பிடித்தாலும் விளையாடக்கூடியவர்கள் என்றோ, அவர்கள் திறமை என்றும் குறையாது என்றோ இந்த செயலுக்கு விளக்கமளித்தாலும், அந்த இரண்டு மாதத்தில் உள்ளூர் போட்டியில் வளர்ந்து வரும் நாளைய இளம் நட்சத்திரம் ஒருவருக்கு பந்து வீசவும், அனுபவசாலி ஒருவருடன் கலந்தாலோசிக்கும் வாய்ப்பையும் தோனி போன்ற சிறந்த கேப்டனும், மெல்போர்ன் வீட்டில் ஓய்வெடுக்கும் தவான் போன்ற ஓப்பனிங் பேட்ஸ்மேனும் கொடுக்கலாமே என்ற கேள்வி முக்கியமாகிறது.
இன்று பேட்ஸ்மேன்கள் ஓய்வெடுக்கும் ஒவ்வொரு நாளும், வேறொரு அணியின் பவுலர் ஒருவர், உலகக்கோப்பை வெல்வதற்கான முயற்சியில் பந்துவீச்சு பயிற்சியைப் பெற்றுக்கொண்டிருப்பார். அந்த இடைவெளியை இருவருக்கிடையேயும் உருவாக்குவதைத்தான் ‘ஃபார்ம்’-இல் இருக்கிறவர், இல்லாதவர் எனக் கிரிக்கெட்டில் பகுத்துணர்கின்றனர். நாளையே சரியான பயிற்சி இல்லாமல் உலகக்கோப்பையில் தோனி விளையாடவேண்டுமா? என்ற கேள்வி எழுந்தால் அதைக் கேட்கும் ரசிகனின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை உணர்ந்து செயல்பட்டால் உலகக்கோப்பையில் மேலும் சில ரன்களைக் குவிக்கலாமே தோனி.
Powered by Blogger.