யாழ். மாநகர சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தோற்கடிப்பு

யாழ். மாநகர சபையில்
சமர்ப்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தோற்கடிப்பு: சபையில் காரசார விவாதம் (படங்கள்)

யாழ். மாநகர சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பெரும்பாலான உறுப்பினர்களினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.  

யாழ். மாநகரசபையின் அமர்வு இன்று வெள்ளிக்கிழமை(07-12-2018) காலை-10 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது. இதன் போது யாழ். மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் சபையில் சமர்ப்பித்தார்.  


மக்களின் அபிவிருத்தித் திட்டங்கள் உள்வாங்கப்படாமல் ஆடம்பரமான பட்ஜெட்டாக காணப்படுவதால் குறித்த பட்ஜெட்டைத் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சபையில் தெரிவித்தனர்.  

எனினும், குறித்த பட்ஜெட்டைத் தோற்கடிக்கப்பட்ட பட்ஜெட்டாகத் தாம் கருதவில்லை எனத் தெரிவித்த யாழ். மாநகர சபையின் முதல்வர் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளுமாறும் சபை உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார். 

பட்ஜெட்டை யாழ். மாநகர சபை முதல்வர் சபையில் சமர்ப்பித்த பின்னர் தனது கொள்கை விளக்க உரையை முடித்த பின்னர் பட்ஜெட்டை வாக்கெடுப்புக்கு விடுவதே முறையானதென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.எனினும் முதல்வர் அதற்குச் சம்மதிக்கவில்லை. 

இந்நிலையில் பட்ஜெட்டில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதாகவிருந்தால் இதனை நிராகரிக்கப்பட்ட பட்ஜெட்டாக ஏற்று செய்யத் தயாராகவிருப்பதாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்தக் கூற்றை முதல்வர் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் பட்ஜெட்டுக்கான வருமான சீர்திருத்தங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுச் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. 

மாநகர சபையின் அமர்வு மதியநேர உணவு வேளையின் பின்னர் மீண்டும் ஆரம்பமான போது பட்ஜெட்டுக்கான செலவீன சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதம் ஆரம்பானது. 

இதன்போது வருமானத்தில் 350 மில்லியன் ரூபா குறைகின்ற காரணத்தால் செலவைக் குறைக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. மக்களின் அபிவிருத்தித் திட்டங்கள் சார்ந்த செலவுகள் காணப்படாதததுடன் முற்றுமுழுதாக ஆடம்பரச் செலவுகளுக்கும், வெளிநாட்டுச் செலவுகளுக்கும், கடன்களுக்கும் இந்த பட்ஜெட்டில் அதிக நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  எனவே, செலவுகளை சீர்திருத்தி தகுந்த செலவீனமுள்ள பட்ஜெட்டை சபையில் சமர்ப்பிக்குமாறு மாநகர சபையின் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களான வரதராஜன் பார்த்தீபன், எம். மயூரன் ஆகியோர் வலியுறுத்தினர். இதேபோன்று வருமானத்திற்குத் தகுந்தவாறு செலவு சீர்திருத்தங்களை மேற்கொண்டு பட்ஜெட்டை புதுப்பித்துச் சபையில் சமர்ப்பிக்குமாறு வேறொரு கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் வலியுறுத்தினர். 

இதனையடுத்து பட்ஜெட் வருமானத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் போன்று செலவீன சீர்திருத்தங்களையும் சபை உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டுமென யாழ். மாநகர சபை முதல்வர் கேட்டுக் கொண்டார். முழு செலவீன விபரங்களையும் தற்போது எங்களால் ஒவ்வொன்றாக எழுதிக் கணித்துக் கொண்டிருக்க முடியாது. 530 மில்லியன் ரூபாவுக்கான செலவீன விபரங்களையும் எங்களிடம் தருமாறு கேட்டுக் கொள்கின்றோம். எனவே, இந்த பட்ஜெட்டை தோற்கடிக்கப்பட்ட பட்ஜெட்டாகவே எங்களால் கருத முடியும்.இது தொடர்பில் நாம் கலந்தாலோசித்தே முடிவெடுக்க முடியுமெனவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

எனினும், சபையின் முதல்வர் நிராகரிக்கப்பட்ட பட்ஜெட்டாக கருதக் கூடாது என அழுத்தமாகத் தெரிவித்தார். இதனையடுத்து சபையில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன. இதன் போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.டி.பி கட்சி இரு கட்சி உறுப்பினர்களும் இணைந்து கழுத்தறுத்து விட்டதாகவும் யாழ்.மாநகர சபையின் முதல்வர் கடுமையாக குற்றச்சாட்டினார். குறித்த குற்றச்சாட்டிற்குப் பதிலளித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் எஸ்.கிருபாகரன் இரு பகுதியினரும் சேர்ந்து கழுத்தறுத்து விட்டதாக நீங்கள் கூறியிருந்தீர்கள். எங்களுக்கு ஈ.பி.டி.பியுடனருடன் சேர வேண்டிய அவசியமில்லை. எனவே, குறித்த குற்றச்சாட்டை வாபஸ் பெற வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். 

இதனையடுத்து   தமிழ்த்தேசிய மக்கள்
முன்னணியின் உறுப்பினர் எஸ்.கிருபாகரனுக்கும் யாழ். மாநகர சபை முதல்வருக்குமிடையில் காரசாரமான விவாதம் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து யாழ்.மாநகர சபையின் முதல்வர் பட்ஜெட்டை வாக்கெடுப்புக்கு விடாமல் சபையை ஒத்தி வைத்தார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.