ஈழத்தின் புதுக்குடியிருப்பில் நடந்தேறிய 'மண்பட்ட வேதனை' நூலின் வெளியீட்டு விழா

ஒன்பது மாத சிசுவாக தாயின் வயிற்றில் இருக்கும்போதே, இலங்கையின் போர்க்காலத்தில்
துப்பாக்கிச் சூட்டில் தந்தையை இழந்தவர் முல்லையூர் வன்னிக்கவியோன். இவரது கன்னிப் படைப்பான 'மண்பட்ட வேதனை' நூலின் வெளியீடானது 09.12.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு, ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின், புதுக்குயிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு சிறுவர் அபிவிருத்தி முன்னெடுப்பு நிறுவனத்தின் நிறைவேற்று இயக்குநர்   அருட்சகோதரி நிக்கொலா இம்மானுவேல் தலைமை வகித்தார்.

 விருந்தினர்கள் வரவேற்பு, சுடர் ஏற்றல், அகவணக்கம், தமிழ்மொழி வாழ்த்து என்பன முறையே இடம்பெற்றன. ஆசியுரையினை சிவஸ்ரீ நவரட்ணம் வழங்கினார். வரவேற்பு நடனத்தினை கெள.கோமகள், சி.நிலாவெளி ஆகியோர் அளித்தனர். வரவேற்புரையுரையினை யாழ் மாவட்டத்தினைச் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் வற்சலா துரைசிங்கம் வழங்கினார்.

தலைமையுரையினைத் தொடர்ந்து வாழ்த்துரையினை வைத்திய கலாநிதி இ.மாதவராஜா அளித்தார். பிரதம அதிதி உரையினை இங்கிலாந்து தேசத்தில் வசிக்கும் தற்காப்புக் கலை ஆசிரியர் முத்துச்சாமி ராமதாஸ் நிகழ்த்தினார். யோ.புரட்சி அறிமுகவுரை வழங்கினார்.

நூலினை சிறுவர் அபிவிருத்தி முன்னெடுப்பு நிறுவனத்தின் நிறைவேற்று இயக்குநர் அருட்சகோதரி நிக்கொலா இம்மானுவேல் வெளியிட, முதற்பிரதியினை அறிவிருட்ஷம் துரித கல்வி, சமூக மேம்பாடு அமைப்பின் இயக்குநர் ஐ.எம்.சுரைஸ் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து யாவர்க்கும் பிரதிகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் நாகராஜ் பவதாரணி அவர்களின் நடனமும் இடம்பெற்றது.

நூலின் ஆய்வுரையினை இலங்கை யோகா பயிற்சிக் கல்லூரி இயக்குநர் கவிஞர் ஜெயம் ஜெகன் நிகழ்த்தினார்.
ஏற்புரையுடன் கூடிய நன்றியுரையினை நூலாசிரியர் முல்லையூர் வன்னிக்கவியோன்  வழங்கினார்.

இந்நூலில் உள்ள பின்னட்டைக் குறிப்பு இது.

மனம் பட்ட வேதனையாக உலவும் 'மண்பட்ட வேதனை'

வன்னியின் வலயத்துள் இருப்பதே முல்லை மாவட்டம். இதன் அழகே கவிதைதான். இவையெலாம் ஒன்றான பெயராகியதே 'முல்லையூர் வன்னிக்கவியோன்'.

தற்காப்புக் கலைதன்னில் மிளிரும் இவன் கவிவார்ப்புக் கலையிலும் தன்னை ஈடுபடுத்தியதன் எதிரொலியே இப்படைப்பு.

ஒன்பது மாதக் கருவாக தாயின் வயிற்றில் இருந்தபோதே தந்தையை இழந்த இவன் இயற்பெயர் தனுசன்.

குறும்படங்களில் நடிக்கும் இவன் வாழ்க்கை பெரும்படம் போன்றது.

'முல்லையூர் வன்னிக்கவியோன்' எனும் இவரை பெற்றெடுத்த அன்னை இருதயராணி. பெயர் கொடுத்த தந்தை கேதீஸ்வரன்.

முல்லை மாவட்டத்திலமைந்த கொக்குளாய் அ.த.க பாடசாலை, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி ஆகியவற்றில் கல்விச் சோறுண்ட கவிஞன் இவன்.

குத்துச்சண்டையிலே முத்தென ஒளிரும் இவன் குறும்படங்களிலும் நடித்தவன். 'எதிர்வைரஸ்',  'உயிர் சாயி' ஆகிய குறும்படங்களில் நடித்ததோடு, 'மனதோடு மழைச்சாரல்' படத்திற்கு ஒளிப்பதிவாளராகவும், 'கருவறை' படத்தின் இயக்குநராகவும் இயங்கியவன்.

இது ஓரொளியே. பேரொளியல்ல.

இன்னுமிவன் சுடர்க. இலக்கியத்தில் படர்க.

No comments

Powered by Blogger.