பொலன்னறுவை றோயல் கல்லூரி மாணவனின் புதிய வீட்டுக் கனவு

பொலன்னறுவை றோயல் கல்லூரி மாணவனின் புதிய வீட்டுக் கனவு
ஜனாதிபதியினால் நனவானது….

2018 ஆகஸ்ட் 02ஆம் திகதி ”எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பொலன்னறுவை றோயல் கல்லூரியின் கிரிக்கட் மைதானத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வின் போது அக்கல்லூரியில் தரம் 09 இல் கல்வி கற்கும் ஷாலிக்க லக்ஷான் என்ற மாணவன் ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் கதை ஒன்றை கூறினார்.

மிக அழகிய முறையில் அக்கதையை கூறிய மாணவனை தன்னிடம் அழைத்த ஜனாதிபதி அவர்கள், அவனது திறமையை பாராட்டி, அவனது தேவைகளை கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து மாணவனின் கோரிக்கைக்கேற்ப 2018 ஆகஸ்ட் 04ஆம் திகதி பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்திற்கருகில் கனங்கொல்ல புதிய நகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மூன்று பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை கவனித்துகொண்டு கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் கே.ஆர்.ஜயதிலக்க உள்ளிட்ட குடும்பத்தின் நிலைமைகளை நேரில் கண்டறிந்ததுடன், பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அவர்களது வீட்டை துரிதமாக முழுமைப்படுத்தித் தருவதாக உறுதியளித்தார். 

அந்த வகையில் எழுச்சிபெறும் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மற்றும் ஒரு மக்கள் பணியாக ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் ஷாலிக்க லக்ஷான் என்ற மாணவனின் வீடு துரிதமாக முழுமையான ஒரு வீடாக நிர்மாணிக்கப்பட்டு இன்று பிற்பகல் ஜனாதிபதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

ஷாலிக்க லக்ஷான் என்ற மாணவனின் கனவு நனவான இந்த நிகழ்வுக்கு ஆசீர்வாதம் வழங்குவதற்கு ஸ்ரீ வித்தியாலோக்க விகாராதிபதி தெமுன்னேவே ஸ்ரீ உபரத்ன நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் வருகை தந்திருந்தனர்.

மஹா சங்கத்தினரின் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் வீட்டை திறந்துவைத்த ஜனாதிபதி அவர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் சுமூகமாக கலந்துரையாடியதுடன், மாணவனின் எதிர்கால கனவு பற்றியும் கேட்டறிந்தார். அம்மாணவனின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுவதாகவும் ஜனாதிபதி அவர்கள் உறுதியளித்தார்.

ஜனாதிபதி அவர்களின் வருகையை அறிந்து பெரும் எண்ணிக்கையான பிரதேசவாசிகள் அங்கு வருகை தந்திருந்தனர். அவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்கள், அம்மக்களின் விபரங்களை கேட்டறிந்ததுடன், அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தினார்.

பொலன்னறுவை நகர பிதா சானக சிதத் ரணசிங்க, மாவட்ட செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபயவர்தன, பொலன்னறுவை றோயல் கல்லூரி அதிபர் ரவிலால் விஜேவங்ஷ ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.