திமுகவை நோக்கி செந்தில் பாலாஜி? தினகரன் அணியை வளைக்கும் ஸ்டாலின்

திருச்சியில் உள்ள மிகப் பிரபலமான ஹோட்டலுக்குக் கடந்த வாரத்தில் திமுக எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் வந்திருக்கிறார். அந்த ஹோட்டலில் ரூம்
ஒன்றில் தங்கியும் இருக்கிறார். அவர் வந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான செந்தில் பாலாஜியும் அதே ஹோட்டலுக்கு வந்திருக்கிறார். ரெஸ்டாரண்டில் உட்கார்ந்து காபி குடித்தவர், யாரிடமோ நீண்ட நேரம் போனிலும் பேசியிருக்கிறார். அதன் பிறகு அன்பில் மகேஷ் தங்கியிருந்த அறைக்குப் போயிருக்கிறார். மூன்று மணிநேரத்துக்கும் மேலாக இருவரும் பேசியிருக்கிறார்கள். அதன் பிறகு செந்தில் பாலாஜி அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு கரூரில் தினகரன் அணி சார்பாக நடந்த ஜெயலலிதா நினைவு நாள் கூட்டத்தில் செந்தில் பாலாஜி பங்கேற்கவில்லை. சென்னையில் நடந்த ஜெயலலிதா நினைவு நாள் ஊர்வலத்துக்கும் வரவில்லை. வழக்கமாக, நவம்பர் இறுதி வாரத்தில் கரூரில் உள்ள ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸில் காலண்டருக்கு ஆர்டர் கொடுப்பார் செந்தில் பாலாஜி. இந்தமுறை ஆர்டர் கேட்டுப் போன பிரஸ் உரிமையாளரிடம், ‘இப்போ காலண்டர் வேண்டாம். நான் அப்புறம் சொல்றேன்’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். ஜெயலலிதா நினைவு நாளில், நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையிலும் செந்தில் பாலாஜியின் விளம்பரம் இல்லை. இப்படியாக அவரது செயல்பாடுகள் எல்லாமே கடந்த இரண்டு வாரங்களாகப் புதிராகவே இருக்கிறது.

செந்தில் பாலாஜியை எதிர்த்து திமுகவில் போட்டியிட்டவர், கரூர் சின்னசாமி. அவர்தான் இந்த நிகழ்வுகளுக்கான விடையைச் சொல்லியிருக்கிறார். கரூரில் துக்க நிகழ்வு ஒன்றில் பங்கேற்கப் போன சின்னசாமியிடம் அவருக்கு நெருக்கமானவர்கள் பேசியிருக்கிறார்கள். அப்போது சின்னசாமியோ, ‘செந்தில் பாலாஜிக்கு எதிராக இனி எதையும் செய்ய வேண்டாம்..’ என்று சொல்ல... அவருக்கு நெருக்கமான நண்பர்களோ ஆச்சரியத்துடன் கேட்டபோதுதான் பூனைக்குட்டி வெளியே வந்திருக்கிறது. ‘செந்தில் பாலாஜி இங்கே நம்ம கட்சிக்கு வர்றதுக்கு ஓகே சொல்லியிருக்காரு. மகேஷ் மூலமாக பேசியிருக்காங்க. அரவக்குறிச்சியில் நம்ம கட்சி சார்பாகவே அவருதான் நிற்கப் போறாரு. தலைமையில் இருந்தும் கூப்பிட்டு சொல்லிட்டாங்க. எனக்கு எம்.பிக்கு கொடுக்கிறதா சொல்லிட்டாங்க. எம்.பி. தேர்தலுக்கு இங்கே ஆகும் செலவை அவரு பார்க்கிறதா சொல்லிட்டாராம். சீக்கிரமே அவரு இங்கே வந்துடுவாரு. அதனால யாரும் அவரைப் பத்தி தப்பா வாய்விட்டுட வேண்டாம்...’ என்று சொல்ல... திமுகவினர் அதிர்ந்துவிட்டார்களாம். இந்த தகவல் கரூர் திமுக வட்டாரத்தில் தீயாகப் பரவ ஆரம்பித்திருக்கிறது.

‘இவ்வளவு நாளா கரூரில் செந்தில் பாலாஜியை எதிர்த்துதான் அரசியல் பண்ணிட்டு இருக்கோம். அவருக்கும் எங்களுக்கும் தனிப்பட்ட பகை எதுவும் இல்லை. கட்சிக்காகத்தான் அவரை பகைச்சுகிட்டோம். இப்போ திடீர்னு அவங்க கைகோர்த்துகிட்டாங்கன்னா நாங்க என்ன பண்றதுன்னு தெரியல. என்னதான் இருந்தலும் எங்களைப் பார்த்தால் அவரு மனசுக்குள்ள ஒரு சின்ன வருத்தம் இருக்கத்தானே செய்யும்...’ என்ற புலம்பல் திமுகவில் கேட்க ஆரம்பித்துள்ளது. ” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

“இது என்ன புதுக்கதையா இருக்கு? தினகரன் ஆதரவாளர்களை அதிமுக இழுக்கும்னு பார்த்தால் திமுக இழுக்க ஆரம்பிச்சிருக்கு?” என்ற கேள்வியை ஃபேஸ்புக் போட்டது. பதிலை உடனே டைப்பிங் செய்தது வாட்ஸ் அப்.

“எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைந்த சில மாதங்களில் தினகரனை ஒதுக்கியபோது அவர் பக்கம் கணிசமான எம்.எல்.ஏ.க்கள் வந்தனர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை வைத்து ஆட்சியைக் கவிழ்க்கலாம் என்று திமுகவும் ஆரம்பத்தில் முயன்றது. இதற்காக தினகரன் தரப்புக்குச் சில உதவிகளும் திமுக சைடிலிருந்து செய்யப்பட்டன. ஆனால் போகப் போக தினகரனின் போக்கில் மாற்றத்தைக் கண்டது திமுக. அப்போது ஸ்டாலினைச் சுற்றியிருப்பவர்கள் அவர்களிடம், ‘எடப்பாடி, பன்னீரெல்லாம் ஆட்சியில் இருக்கும் வரைதான் மதிப்போடு இருப்பார்கள். தினகரன் தான் ஆட்சி போன பிறகும் நீடிப்பார். எனவே அவர் நமக்கு எதிராகத்தான் இருப்பார். உங்களுக்கு எதிராக அரசியல் நடத்தறதுல உறுதியா இருக்கார். அதனால இனிமே தினகரன் அணியை நம்பிப் பிரயோஜனம் இல்ல. அதனால அவர் அணியை பலவீனப்படுத்துற வேலைகளை நாம செய்யலாம்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதற்குப் பிறகுதான் தினகரன் அணியில் இருக்கும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு வலைவிரிக்க ஆரம்பித்திருக்கிறது திமுக. இதில் முதலில் சிக்கியது அரவக்குறிச்சி செந்தில் பாலாஜி. தினகரன் அணியில் இருக்கும் இன்னும் சிலரையும் விரைவில் திமுக பக்கம் இழுக்கும் வேலைகள் தீவிரமாக நடக்கிறது. செந்தில் பாலாஜியைப் பொறுத்தவரை பணத்துக்குப் பிரச்னை இல்லை. 

No comments

Powered by Blogger.