படத்துக்கு புரமோஷன் செய்யும் ஏ.ஆர்.ரஹ்மான்

ரஜினி நடிப்பில் நவம்பர் 29 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுக்க 2.0 படம் வெளியானது. கடந்த நான்கு நாட்கள் வசூலில் உலகளவில் முதலிடம் பிடித்துள்ளதாக இன்று காலை முதல் செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகிறது.உலக அளவில் ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் என்கிற படம் முதலிடத்தில் இருந்ததாகவும் அந்தப்படத்தின் வசூலை முறியடித்து இந்தப்படம் முதலிடம் பிடித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.


நான்கு நாட்களில் நானூறு கோடி வசூலித்திருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தத் தகவல் வெளியான செய்தி இணைப்பை தன் டிவிட்டர் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டிருக்கிறார்.

பொதுவாக வியாபாரம் தொடர்பான தகவல்களில் தயாரிப்புநிறுவனங்களே வசூல் விபரங்களை பகிரங்கமாக தமிழ் சினிமாவில் அறிவிப்பதில்லை. தீபாவளி அன்று வெளியான சர்கார் படத்தின் வசூல், இது போன்றுதான் பிரமிப்பை உண்டாக்கும் வகையில் செய்திகளாக வெளியானது.

தற்போது சர்கார் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும், படத்தை திரையிட்ட திரையரங்க உரிமையாளர்களுக்கும் குறைந்த பட்ச லாபம் கூட கிடைக்கவில்லை என்று விநியோகஸ்தர்கள் வெளிப்படையாக பேசத் தொடங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் வழக்கமாக வியாபார விஷயங்களில் தலையிடாமல் ஒதுங்கியிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் 2.0 திரைப்படம், ரூபாய் 400 கோடி வசூல் செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி இணைப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் தகவலாக வெளியிட்டிருப்பது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது சம்பந்தமாக விநியோக வட்டாரத்திலும், தியேட்டர் வட்டாரத்திலும் விசாரித்தபோது 2.0 படத்தின் வசூல் தொடக்கம் முதலே ஆரோக்கியமாக இல்லை. 3D தொழில்நுட்ப வசதி உள்ள தியேட்டர்களில் வெள்ளி மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை இரவுக் காட்சி வரை வசூல் அதிகரித்தது.

வட இந்தியாவில் பாகுபலி - 2 இந்தி பதிப்பு, முதல் நாள் 41 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை நிகழ்த்தியது. அப்படத்தில் இந்தி நடிகர்கள் யாரும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2.0 படத்தில் ரஜினிக்கு இணையான நட்சத்திர அந்தஸ்து கொண்ட அக்‌ஷய் குமார் நடித்திருக்கிறார். ரஜினி, ஷங்கர், ரஹ்மான் என பிரபலமானவர்கள் கூட்டணியில் உருவான இப்படத்தின் முதல் நாள் மொத்த வசூல் 21 கோடி. பிறகு எப்படி 400 கோடி ரூபாய் நான்கு நாட்களில் வசூலித்திருக்கும் என எதிர் கேள்வி கேட்ட விநியோகஸ்தர், 2.0 படத்தின் வசூலை அதிகரிக்க A.R ரஹ்மான் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்கிறார்.

இதுவரை 2.0 படத்தின் வசூல் விபரங்களை வெளியிட்டுள்ள ஆங்கில ஊடகங்கள் எதுவும் லைகா நிறுவனத்திடம் தகவல்களை கேட்டு வெளியிடவில்லை. தயாரிப்பு நிறுவனங்கள் கூறுவதைக் கேட்டு அவர்கள் விருப்பப்படி ட்விட்டரில் தகவல்களை பரப்புபவர்கள் வெளியிட்ட தகவல்களை மேற்கோள் காட்டி செய்திகளை ஆங்கில பத்திரிகைகள் பிரசுரிக்கின்றன. இது போன்று தகவல்களை ட்விட்டரில் பரப்புகின்றவர்களுக்கு இங்கு நடைமுறையில் உள்ள வியாபார முறைகள், தியேட்டர் பற்றிய அடிப்படை தகவல்கள் கூடத் தெரியாது, ஆனால் அப்படிப்பட்ட நபர்களை வியாபார ஆய்வாளர்கள் என அடைமொழி கொடுத்து முன்னணி பத்திரிகைகள் செய்தி வெளியிடுவதை படிக்கும் போது சிரிப்புத்தான் வருகிறது என்கிறார் செங்கல்பட்டு ஏரியாவில் 20 ஆண்டுகாலமாக விநியோக துறையில் இருக்கும் G மூவீஸ் செல்வம்.

No comments

Powered by Blogger.