ரஞ்சன் ராமநாயக்கவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, எதிர்வரும் 7ஆம் திகதி
நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைக்காக நியமிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் தொடர்பில் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வௌியிட்டமை குறித்து ரஞ்சன் ராமநாயக்கவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பிரதம நீதியரசர் உயர் நீதிமன்றத்தின் தலைமை பதிவாளருக்கு இன்று(திங்கட்கிழமை) அறிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து அடங்கிய காணொளியை பிரதம நீதியரசர் தலைமையிலான நீதியரசர் குழாம் பரிசீலித்ததன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 7ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு சட்டமா அதிபருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.