முன்னாள் போராளிகளின் சமூக செயற்பாடுகள் முடக்கப்படுகின்றன

எந்த சம்பவம் நடைபெறும் போதும் அதற்குள் முன்னாள் போராளிகளை இழுத்து விடுவது சாதாரண விடயமாக மாற்றம் பெற்று வருவதாக தேசத்தின் வேர்கள் அமைப்பின் தலைவர் க.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு பயணியர் வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

முன்னாள் போராளிகளின் சமூக செயற்பாடுகள், அவர்களின் கருத்து சுதந்திரம் என்பனவற்றை முடக்கும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்று சந்தேகம் ஏற்படுகின்றது.

வவுணதீவில் பொலிஸார் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதை தமது அமைப்பு வன்மையாக கண்டிப்பதாகவும் குறித்த படுகொலை தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

குறித்த கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள அஜந்தனுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். மூன்று பிள்ளைகள் கல்வி கற்கின்றனர். 5ஆவது குழந்தை பிறந்து நாற்பது நாட்களேயாகின்றது. அவரின் குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது.

குறித்த பொலிஸார் சுடப்பட்ட காலப்பகுதியில் அஜந்தன் மிகவும் வேலைப்பழுவில் இருந்திருந்தார். அவருடைய மனைவி வைத்தியசாலையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் நிச்சயமாக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடமாட்டார்கள். தேசத்தின் வேர்கள் அமைப்பினை குறித்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தி பலர் எழுதி வருகின்றனர். இதுமிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

எமது அமைப்பு கிழக்கில் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுவரும் நிலையில் அதனை சிதைக்கும் வகையில் பலர் செயற்பட்டு வருகின்றனர்.

எமது அமைப்பு இலங்கையின் இறையாண்மையினை பாதிக்கும் வகையில் எந்த செயற்பாடுகளையும் செய்வதில்லை. எந்தவித வன்முறை சம்பவங்களுடனும் தொடர்புபட மாட்டார்கள் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை மட்டுமே நாம் மேற்கொள்கின்றோம்.

தற்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையினால் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றிருக்கலாம், யுத்த காலத்தில் இப்பகுதியில் செயற்பட்டு வந்த ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் இன்னும் களையப்படவில்லை.

இவ்வாறான நிலையில் அதில் இருந்தவர்கள் முன்னாள் போராளிகளை தொடர்புபடுத்தி தாங்கள் தப்பித்துக்கொள்வதற்காக இதனை செய்திருக்கலாம். இதுவே எங்களது சந்தேகமாக இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
#Trincomalee  #Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.