வவுனியாவில் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்டுத்தருமாறு கோரிக்கை

வவுனியா தர்மலிங்கம் வீதி சந்தியில் வாகனங்கள் நிறுத்தப்படும் இடம் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு வர்த்தக நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை நகரசபை மீட்டுத்தர வேண்டுமெனவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.


மரக்கறி மொத்த விற்பனை நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு முன்பாக வாகனங்கள் நிறுத்துவதற்காக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த இடத்தினை ஒரு சிலர் அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி ஆக்கிரமித்துள்ளதுடன் தற்போது அதில் நிரந்தரமான கடைகளையும் கட்டி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக வவுனியா நகரசபையினர் அக்கறை செலுத்தாமையினால் குறித்த சந்தைக்கு செல்பவர்கள் வீதியோரங்களில் வாகனங்கள் நிறுத்தி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன் பிரயாணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் வவுனியா நகர்ப்பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் வவுனியா நகரசபை கவனம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் குறித்த வாகனம் நிறுத்தும் இடத்தினையும் தனியார் கையகப்படுத்தியமை தொடர்பாக வவுனியா நகரசபை அசமந்தமாக உள்ளமை தொடர்பாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரசபையானது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன் குறித்த கட்சியினர் ஆட்சி அமைப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுன, ஈழமக்கள் ஜனநாயக கட்சி என்பன ஆதரவளித்துள்ள நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து குறித்த சட்டவிரோத வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna #colombo#Vavuniya

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.