வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் பேரணி

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு
வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 1 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.
குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் பின்னர் பேரணியாக குடியிருப்பு பாடசாலை வீதி வழியாக வைத்தியசாலை சந்திக்குச் சென்று தமது போராட்ட களத்தினை வந்தடைந்துள்ளனர்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் வடகிழக்கில் தமிழர் தீர்வு பற்றிய வாக்கெடுப்பு நடாத்த ஜ.நா.வின் உதவியை நாடுகின்றோம்,  ஜனநாயகத்தை ஊக்குவிப்பதற்கான வாக்கெடுப்பு எனப் பொறிக்கப்பட்ட பதாதையினை கையில் ஏந்தியவாறு, 658 நாட்களாக வவுனியாவில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டம் மேற்கொண்டு வரும்  காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்  இந்த போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.
தமிழர் தாயக பகுதிகளான வடக்கு கிழக்கில் இறுதிக்கட்ட யுத்ததின் போதும் அதற்கு பின்னரும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட மற்றும் இராணவத்தினரால் கடத்தப்பட்டு பலர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் வவுனியாவில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.