மஹிந்த – ரணில் இருவருமே பிரதமர் கதிரைக்கு ஏற்புடையவர்கள் அல்லர்:

மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்க இருவருமே பிரதமர் கதிரைக்கு ஏற்புடையவர்கள் அல்ல என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக சஜித் பிரேமதாச முன்வைத்த சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”அரசாங்கத்தின் எதிர்காலம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையிலன்றி, தமது செயற்பாடுகள், அமைச்சரவை, ஆட்சி நிர்வாகம், மக்கள் நம்பிக்கை என்பவற்றிலேயே தங்கியுள்ளது.
கடந்த மூன்று வருடங்களாக எண்ணிக்கையின் அடிப்படையில் பெரும்பான்மையை நிரூபித்துவந்த நல்லாட்சி, மக்கள் நம்பிக்கையை வெல்ல தவறிவிட்டது.
ஒக்டோபர் 26ஆம் திகதி சூழ்ச்சியை மைத்திரிபால சிறிசேன தமது அரசியல் தேவை கருதி செய்தார். மஹிந்தவும் அதற்கு பங்காளி. அப்படியொரு சூழலை உருவாக்கவதற்கான பின்னணி குறித்து புரிந்துகொள்ள வே;ணடும். நான் அந்த விடயத்தை நியாயப்படுத்தவில்லை. ஜனாதிபதி அவ்வாறு செய்ய ஏன் முனைந்தார்? மக்களுடைய தேவைகளை நிறைவேற்றாமல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் செயற்பட்ட காரணத்தால் இந்நிலைமை ஏற்பட்டது.
ரணில் மஹிந்த இருவரும் இந்த கதிரைகளில் இருந்து ஆட்சிசெய்த சந்தர்ப்பத்தை பார்த்துள்ளோம். ஒக்டோபர் 26ஆம் திகதி ஆட்சியை பிடித்த விடயம் எமக்கு பிரச்சினை. மஹிந்த பதவிக்கு வந்ததோ, ரணில் சென்றதோ எமக்கு பிரச்சினை கிடையாது.
அரசியல் ரீதியில் நாம் ஒரு நிலைப்பாட்டில் உள்ளோம். நாடாளுமன்றிலும் சரி நீதிமன்றிலும் சரி அரசியல் சூழ்ச்சிக்கு எதிராக செயற்படுவோம். ரணில் இந்த கதிரையில் அமர்ந்தால் எந்த புதிய விடயமும் இடம்பெறாது” எனத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.