மகிந்த மீது கடுமையாக சீறும் சுமந்திரன்

கொமன்வெல்த் வரலாற்றில், முதல் முறையாக பிரதமர் ஒருவர் செயற்படுவதற்கு நீதிமன்றம் ஒன்று, இடைக்கால தடை உத்தரவு விதித்துள்ளது என்று ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.


பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவர் தலைமையில் இருந்த அமைச்சரவைக்கு எதிராகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடை உத்தரவை வரவேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

“இனியாவது இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டதை ஏற்றுக்கொண்டு, பிரதமர் ஒருவரை நியமிக்க வேண்டியது ஜனாதிபதியின் அரசமைப்புக் கடமையாகும். கொமன்வெல்த் வரலாற்றைப் பின்பற்றி ஜனாதிபதி அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்றும் சுமந்திரன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு நேற்று பிறப்பிக்கப்படும்போது, மஹிந்த தரப்பைச் சேர்ந்த மூவர் மாத்திரமே நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.

இடைக்கால தடை உத்தரவு வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோதே, அநுரபிரியதர்சன யாப்பாவும், சந்திம வீரக்கொடியும் இறுக்கமான முகத்துடன் அவசரமாக எழுந்து வெளியே சென்றனர்.

உத்தரவு வாசிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட உதய கம்மன்பில, இந்த உத்தரவை தாம் எதிர்பார்க்கவில்லை என்றும், போலியான ஆவணங்கள் நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என்றும் தெரிவித்தார்.

அதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை தாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று மஹிந்தவின் விசுவாசிகளில் ஒருவரான சந்திம வீரக்கொடி தெரிவித்திருந்தார்.

எனினும், மஹிந்த ராஜபக்ஷ இந்த உத்தரவை ஏற்றுக்கொள்ளவில்லை என்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna #Sumanthiran #Mahinda

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.