துணை ராணுவப் படைகளில் 15% பெண்கள்


துணை ராணுவப் படைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு
இறங்கியுள்ளதாக, நாடாளுமன்ற விவாதத்தில் தெரிவித்தார் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு. நேற்று (ஜனவரி 8) நாடாளுமன்ற மக்களவையில் நடந்த கேள்வி நேர விவாதத்தின்போது, துணை ராணுவப் படைகளில் பெண்களின் பங்கு பற்றி பதிலளித்தார் மத்திய உள் துறை தனியமைச்சர் கிரண் ரிஜிஜு. அப்போது மத்திய ரிசர்வ் காவல் துறை, மத்திய தொழிற் பாதுகாப்பு படைப் பிரிவுகளில் 15 சதவிகிதம் என்ற அளவில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். எல்லை பாதுகாப்புப் படை, இந்தோ-திபெத்தியன் எல்லை காவல், சஷாஸ்த்ர சீமா பல் என்ற எல்லை ஆயுதப் படைப் பிரிவுகளில் 5 சதவிகிதம் என்ற அளவில் பெண்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் இருக்குமென்று அவர் தன் பேச்சில் குறிப்பிட்டார். “துணை ராணுவப் படைகளில் பெண்களின் பங்கை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. பெண்களின் பங்கு குறித்து துணை ராணுவப் படைக்குழு அளித்த உடன்பாட்டுப் பரிந்துரைகள் அடங்கிய ஆறாவது அறிக்கையின்படி, அனைத்து துணை ராணுவப் படைகளிலும் பெண்களின் எண்ணிக்கையை 5 சதவிகிதம் அளவில் அதிகரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார் கிரண் ரிஜிஜு. 2016ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதியன்று மத்திய ரிசர்வ் காவல் படை, மத்திய தொழிற் பாதுகாப்புப் படைகளில் உள்ள பெண் காவலர்களின் எண்ணிக்கையை 33 சதவிகிதம் என்ற அளவில் உயர்த்த முடிவு செய்திருந்ததாகவும், அதேபோல எல்லை பாதுகாப்புப் படை, எல்லை ஆயுதப் படை, இந்தோ- திபெத்தியன் எல்லைக் காவல் போன்றவற்றில் பெண் காவலர்களின் எண்ணிக்கையை 14 -15 சதவிகிதம் என்ற அளவில் அதிகரிக்க முடிவு செய்திருந்ததாகவும், கிரண் ரிஜிஜு தன் பதிலில் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.