பாடுநிலாவே பாகம் 21

கனத்த மனதோடு மறுபுறம் நடந்தான் காங்கேசன்.
அவனது தளர்ந்த நடை மனதை வலிக்கச் செய்தாலும் வேறு வழியின்றி அவனையே பார்த்தபடி நடந்து சென்றாள் சாதனா.
காங்கேசனின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அவனது வீட்டினர் கூட சாதனாவிடம் எதுவும் கேட்கவில்லை. சாதனா புறப்பட்ட நாளில், தன்னால் பொறுக்கமுடியாது எனக்கூறி, சாதனாவிடம் பேசப்போவதாகச் சொன்ன தாயாரின் கரங்கள் இரண்டையும் கொத்தாகப் பற்றிக்கொண்ட காங்கேசன், “அம்மா, அவ எனக்கு தேவதை, அவளை யாரும் கஸ்ரப்படுத்தவேண்டாம், அவளோட சந்தோசம் தான் என்னோட சந்தோசமும், தயவுசெய்து, எனக்காக அவளை சந்தோசமா வழிஅனுப்புங்க, அவ மனசை காயப்படுத்தாதீங்க, நம்ம மண்ணைவிட்டு அவ துக்கத்தோட போகவேண்டாம், நிம்மதியா போகட்டும்” என்றான்.
அவனது வார்த்தைக்காக அவனது வீட்டினர், அனைவரும் மௌனம் காத்தனர். காங்கேசனின் பெற்றவர்களை விட பகலவனுக்கும் கானகிக்கும் அதிக மனத்தாங்கல்தான் எனினும் காங்கேசனின் வார்த்தைகள் அவர்களையும் கட்டிப்போட்டது. மௌனமாய் வடிந்த கண்ணீருடன் தன் பாதை நோக்கிப் புறப்பட்டாள் சாதனா.


காலம் இறக்கை கட்டிக்கொண்டது. சாதனா இந்தியாவில் இருந்து தனது மண்ணுக்குத் திரும்பியிருந்தாள். முதல் வேலையாக தனது தொழிலைத் தொடரும் முயற்சிகளில் ஈடுபட்டவள், அதில் வெற்றியும் கண்டாள். அரச வைத்தியசாலையில் தனது பணியை ஏற்றுக்கொண்டவள், அத்தோடு மட்டும் நின்றுவிடாது ஏனைய பொழுதுகளில் தனியார் வைத்தியசாலையிலும் பணியாற்றத் தொடங்கினாள்.

தான் தங்கியிருந்த அருட்சகோதரிகள் மடத்திற்குச் சென்றவள், அங்கிருந்த அருட்சகோதரியுடன் தனது நோக்கம் பற்றி கலந்து ஆலோசித்து அவரது ஆசியுடன் தனது பணியில் களமிறங்கிய சாதனா, முதற்கட்டமாக, வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து, மாற்றுத்திறனாளியாக இருந்த ஐந்து பெண்களை தன்னோடு சேர்த்துக் கொண்டாள்.

நாளோட்டத்தில் ஐந்து பத்தாகி, பத்து இருபதாகி, இருபது நாற்பதாகி நின்றது. சாதனாவைவிட பெரியவர்களே அதிகமானவர்கள். “அக்கா—அக்கா என அழைத்தாலும் அவர்களிடம் அம்மாவின் நேசத்தை உணரத்தொடங்கினாள் சாதனா. அவளது மனமோ சொல்ல முடியாத அமைதியில் திழைத்தது. இதைத்தான் அவள் விரும்பினாள், அவளது பொழுதுகள் இவர்களோடு கரையவேண்டும் என்பதுதானே அவளது அவா. தான் பெரிதாகச் சாதித்துவிட்டதாகவே எண்ணினாள்.
தன் சந்தோசங்களை காங்கேசனிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் மனஓரத்தில் தோன்றியபோதும் இந்த மூன்று மாதங்களில் அவனுடனோ அவனது வீட்டினருடனோ தான் எத்தகைய தொடர்பையும் ஏற்படுத்தாத காரணத்தினால் குற்றஉணர்வு ஒருபுறம் அவளை வாட்டி எடுத்தது. மௌனமாக இருந்துவிட்டாள்.
சாதனாவின் “உங்களுக்காக” எப்போதும் கலகலப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது. இயன்றவர்களுக்கு இயன்ற தொழிற்துறைகளை ஏற்படுத்திக்கொடுத்திருந்தாள். பொழுது போக்கு அம்சங்களாக நூலகமும் கைவினைப்பொருட்கள் செய்வதையும் உருவாக்கியிருந்த சாதனா, அவர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பதற்கான ஏற்பாடுகளையும் செய்துவிட்டிருந்தாள்.

சின்ன வயதில் அவளுக்கிருந்த ஆர்வமும் துடிப்பும் சமுதாயச் சிந்தனையும் அவளோடு அதிகமானவர்களை இணையச் செய்திருந்தது. அவ்வாறு இணைந்துகொண்ட முதியவர்கள் பலரோடு தனது தோழர் தோழியரையும் இணைத்து பயணித்த சாதனாவிற்கு , நண்பர்கள் வட்டம் பெருகத் தொடங்கியது. பலரும் அவளோடு கைகோர்த்துக் கொண்டதால், சொந்தமாக வீட்டோடு இணைந்த பெரும் நிலப்பரப்பு ஒன்றை வாங்கிக்கொண்டனர். புலம்பெயர் தேசத்து உறவுகள் பலர் அவளுக்குத் துணைபுரிந்தனர். அருட்சகோதரி மார்க்கிரட் மூலமாக கிடைத்த புலம்பெயர் உறவுதான் உதய்.

தொடரும்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.