இப்போது மார்பில் அடித்து அடித்து கதறி அழுகின்றாள். ‘இப்பிடி உன்னை குடுக்கிறதுக்காகத்தான் இவ்வளவும் கஸ்ரப்பட்டு படிப்பிசேனா’ என்று என்னை கேள்வி கேக்கின்றாள். சில சமயம் தனது சுய நினைவை இழந்து விழுகின்றாள். என் தங்கைகளின் கண்களில் நீர் வடிந்தோடிய தடம் படிந்திருக்கின்றது. அவ்வப்போது அக்கோடுகள் ஈரலிப்பாக மாறுகின்றன. சிறுவயதில் என்னோடு விளையாடிய, செல்ல சண்டைகள் பிடித்த நினைவுகள் வந்து போகலாம். இல்லை இனி தனகி எங்களை அவ்வப்போது அடிப்பதற்கு அண்ணா இல்லையே என்ற ஏக்கமாக கூட இருக்கலாம்.
சண்டை பிடித்தலும் அடுத்த நிமிடமே சகோதரங்கள் கொஞ்சி விளையாடுவதும் எவ்வளவு இனிமையான தருணங்கள். என்னால் இனி அவற்றை அனுபவிக்க முடியாதென்பது எவ்வளவு பெரிய வலி. உண்மையில் இப்போதுதான் எனக்கு வலி அதிகமாகின்றது. அழுகின்றேன் ஆனால் என் கண்களில் நீர் வடியவில்லை. இலையான் ஒன்று பறந்து வந்து என் ஏக்கத்தை உணர்ந்ததுபோல் என் கண்மேல் அமர்ந்து தன் சிறு இறக்கைகளால் நீவி விடுகின்றது.
ஆனால் கையில் வேப்பங்குழையுடன் நிற்கும் என் பாடசாலைக்கால நண்பன் குழையை விசிறி ஈக்களிடமிருந்து என்னை பாதுகாப்பதாக அவற்றை துரத்தியவண்ணம் நிற்கின்றான். எனது விடைத்தாளை பார்த்து பரீட்சை எழுதியதெல்லாம் ஓர் நீரோட்டம் போல் அவனுக்குள் ஓடிக் கடந்து கொண்டிருக்கும்.
எலோரும் வருவதும் போவதுமாக இருக்கின்றார்கள். எல்லோர் நினைவுகளும் என்னைப் பற்றிய கடந்த காலத்தின் ஏதோ ஒரு புள்ளியில் தொங்கிக்கொண்டு இருக்கும். ‘இந்த வயதில் இவனுக்கு ஏன் இப்படி’ என நினைக்காதவர்கள் இருக்க மாட்டார்கள்.
சில பெண்கள் அம்மாவை தேற்றிக் கொண்டிருந்தார்கள். சிலர் அவ்வப்போது அம்மாவையும் எனது தங்கைகளையும் கட்டியணைத்து அழுதார்கள். அவர்கள் அழுகிறார்கள் ஆனால் என்னை நினைத்து அழுகிறார்கள் என்பதற்கில்லை.  தங்கள் புருசனை, பிள்ளைகளை, தாய் தந்தையை நினைத்து அவர்கள் அழுதுகொண்டிருக்கலாம். இறுதி யுத்தம் எத்தனை உயிர்களை காவு கொடுத்துவிட்டிருக்கின்றது. ஆனால் இது எனக்கான நாள். என்னால் கொண்டாடப்பட வேண்டிய நாள். என் இல்லாமையை நான் கொண்டாட முடியும். இந்த சுயநல உலகினின்றான என் விடுதலை நாள் இது. அப்படியென்றால் என் பிறந்த தினத்தோடு இன்று என் வாழ்வில் இரண்டு கொண்டாட்டங்கள்.
இப்போது அம்மாவின் பார்வை என்னை வெறித்துபார்த்தபடியே குத்திட்டு நிற்கிறது. அவள் என்ன செய்வாள் போராட்டத்தில் ஒரு குழந்தையை காவுகொடுத்தவள். இப்போது என்னையும் இழந்து தவிக்கின்றாள். எங்களில் கல்வி எல்லோருக்கும் அவ்வளவாக கைகூடவில்லை. பல்கலைக்கழகம் முடிக்குமளவிற்கு கற்றதென்னவோ நான் மட்டும்தான். எனது மூத்த அண்ணா பல்கலைக்கழகம் சென்றும் அவனால் தன் கல்வியை முழுவதுமாக தொடர முடியவில்லை காலச்சூழல் அவனை அந்நிய தேசத்தில் விட்டிருக்கின்றது. தனது மனைவி பிள்ளைக்காக அவன் உழைத்துக் கொண்டிருக்கின்றான். அவன் நாட்டிற்கு இனி திரும்பி வர முடியாது. இராணுவ கெடு பிடிகளை காரணமாக சொல்லித்தான் அவன் வெளி நாட்டில் தஞ்சம் புகுந்திருந்தான்.
சிறுக சிறுக என் அம்மா கனவு கண்டுகொண்டிருப்பாள். என்னை படிப்பிப்பதற்காக அவள் எடுக்காத (Loan) லோன் இல்லை. அவள் செய்யாத கூலி வேலை இல்லை. ஆனால் நான் குடும்பத்தை கரையேற்றுவேன் என அவள் நம்பினாள். அவளது நம்பிக்கை விழுந்து நொருங்கிய கண்ணாடி துகள்களாக அவள் கண்முன்னே கொட்டிக் கிடக்கின்றது. கொழுத்தும் வெயிலிலும் வயலுக்குள் நின்று வேலை செய்ய அவளால் மட்டும்தான் முடியும். எட்டு வயதிலிருந்தே இதற்காக அவள் பழக்கப்பட்டிருக்கின்றாள்.
தலை மாட்டில் இருக்கும் குத்துவிளக்கில் எண்ணெய் குறைந்து திரி கருகும் வாசனை வந்து கொண்டிருந்தது. அதற்கு எண்ணெய் விட்டுக்கொண்டிருந்தாள் என் அண்ணி. பூக்களின் வாசமும் சாம்பிராணி வாசமும் எல்லோர் சுவாசங்களிலும் நுழைந்தபடி இருந்தது.
நான் இல்லை என்பதை எல்லோரும் உணர்ந்துதான் இருந்தார்கள். ஆனால் எனது இல்லாமைக்கான காரணம்பற்றி எல்லோரும் ஒவ்வொரு புரிதலுக்குள் சுழன்று கொண்டிருந்தார்கள்.
விடுதலைப்புலிகளை பற்றிய பதிவுகளை முக நூலில் வீராவேசத்துடன் நான் பதிவது இயல்பு. அதனால் எனக்கு அச்சுறுத்தல்கள் வந்திருக்கும் எனவும் நான் இந்த முடிவை எடுத்திருக்க வாய்பிருப்பதாகவும் என் முக நூல் நண்பர்கள் சிலர் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.
மேற்படிப்பிற்காக நான் ஐந்து லட்சம் கேட்டு அம்மாவுடன் முந்தநாள்தான் சண்டை பிடித்திருந்தேன். அம்மா ‘படித்ததுபோதும் ஏதாவது வேலைக்கு எழுதிப்போடு’ என்று சொன்னாள். காசு தர மறுத்திருந்தாள். ‘காசு மட்டும் தரேல்லை எண்டா இனி என்னை கண்ணிலையும் காண மாட்டியள் சொல்லிட்டன்’ என நான் கத்தி விட்டு வெளியே சென்று விட்டேன். அம்மாவின் எண்ணங்கள் இப்போது இதைச் சுற்றித்தானே  ஓடிக்கொண்டிருக்கும்.
அவனுக்கு நானாவது படிக்க காசு தருகிறேன் என்று சொல்லியிருக்கலாம். இப்ப என்னிடம் இல்லை என்றுதானே சொன்னேன் சண்டைபிடித்துவிட்டு (Phone) போனை கட் பண்ணினவன் இப்பிடி பண்ணிட்டானே எண்டு அண்ணா யோசிக்க கூடும்.
இப்படி ஒவ்வொருத்தர் ஒவ்வொரு காரணங்களில் ஏதோ தீவிர ஆராய்ச்சியில் ஈடுபடுவது போல ஆழ்ந்திருந்தனர்.
இப்போது எனது பாடசாலை மாணவர்கள் மலர் வளையத்துடன் என் அருகில் வருகின்றார்கள். ஒரு மாணவன் மலர் வளையத்தை தூக்கிவந்து என் தலைமாட்டில் வைத்து விட்டு செல்கின்றான். தேமாப்பூவின் வாசனை என்னை அரவணைப்பது போல் இருக்கின்றது. தேமா இலைகளையும் பூக்களையும் கொண்டு அந்த மலர் வளையத்தை செய்திருந்தார்கள். எமது வகுப்பு மாணவர்கள்தான் அவ்வாறான மலர் வளையத்தை முதல் முதலில் செய்தோம். பாடசாலை இடைவேளையில் அந்த தேமா மரத்தில் ஏறி விளையாடிய நினைவுகள் மிகவும் இனிமையானவை. மாணவர்கள் வரிசையாக வந்து தங்கள் கைகளில் இருந்த மலர்களை என் பாதங்களில் வைத்துவிட்டு என் முகத்தை உற்று பார்த்தபடி கடந்து சென்றார்கள்.
அந்த அழைப்பு வந்தபோது மாலை ஆறுமணி இருக்கும். எதிரில்கேட்ட குரல் பரீட்சையமானதுதான். ஆம் அது என் மாமாவின் குரல். அப்படித்தான் நான் அவரை சொல்லிக்கொள்வேன். என் மனதில் அவருக்கான இடம் அப்படித்தான் இருந்தது. என் உயிரானவளின் தந்தை அவர். என்னுடன் நிறைய பேச வேண்டுமாம் வீட்டுக்கு வர முடியுமா என்று கேட்டார்.
எனக்கு அதிசயமாக இருந்தது. இவ்வளவு நாளும் என் காதலுக்கு எதிர்ப்பு காட்டியவர் இப்போது பேச அழைக்கின்றார். இவ்வளவுகாலமும் தொலைபேசியில் அவரது குரல் என்னை மிரட்டுவதாகவே இருந்திருக்கின்றது. இன்று பரிவு தெரிகின்றது. எனக்கு தெரியும் எனது உண்மையான காதலை என்றாவது இவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று. மனம் ஆனந்த கூத்தாடியது. அம்மாவோடு சண்டை பிடித்த நினைவுகள் எங்கோ ஓடி ஒழிந்து கொண்டன. ‘இப்போதே வாறேன்’ என்று கூறிவிட்டு சைக்கிளை எடுத்து உழக்க ஆரம்பித்தேன். இடைக்கிடை சைக்கிள் செயினும் கிறீச் கிறீச் எண்ட படி இருந்தது. இதில எப்பிடித்தான் அப்பா வேலைக்கு போறாரோ என்று தோன்றியது.
அவர்களின் வரவேற்பு மகிழ்ச்சியளித்தது. எனது வரவை எதிர்பார்த்ததுபோல வீட்டு கேற்றடியிலேயே அவளது அப்பா வந்து அழைத்து சென்றார். முன் ஹாலில் சோபாவில் உட்கார்ந்திருந்தேன். ‘மைலோ குடிக்கிறியளா இல்லை பெப்சி தரட்டா’ என்று கேட்டார். எனக்கு எதின்னாலும் ஓகே என்பதுபோல பதில் சொன்னேன். அவளுடைய அம்மா கிளாஸ் ஒன்றில் பெப்சி கொண்டுவந்து தந்தார். ஜில் என்று இருந்தது.
இப்போது அவர்கள் பேச்சு முக்கியமான  விடயத்தில் திசை திரும்பியது. எமது எதிர்காலத்தை பற்றிய பேச்சு அது. எனக்கு அடக்க முடியாத சந்தோசம் இருந்தாலும் கொஞ்சம் டீசண்டுக்காக அதை கட்டுபடுத்திகொண்டு பதில் சொன்னேன். ‘தமிழ் ரீச்சிங்க்கு Call பண்ணியிருக்காங்க போட்டிருக்கிறன் எப்பிடியும் கிடைச்சிடும்’. எனக்கோ மனதிற்குள் கற்பனை சிறகு விரித்தது. நான், அவள், நமது குழந்தை என எண்ண அலைகள் நீண்டு கொண்டு சென்றது.
சற்று நேரத்திற்கெல்லாம் எனது பார்வை மங்க ஆரம்பித்திருந்தது. சோபாவிலே சரிந்து விட்டேன். அப்போதுதான் புரிந்தது. பெப்சிக்குள் மயக்க மருந்தை கலந்திருக்கின்றார்கள் என்று. கருவில் துளிர்த்துக் கொண்டிருக்கும் எனது  குழந்தை பற்றிய ஏக்கமும் என்னை அறைந்துகொண்டிருந்தது. வசதி படைத்தவர்களென்றால் தங்கள் காரியங்களை சாதித்துக்கொள்ள எதுவரையும் இவர்கள் செல்வார்கள் என்பது எனக்கு உறைத்தது. அன்று அவள் வீட்டில் இருக்கவில்லை. பாடசாலை விடுமுறையாதலால் கொழும்பிற்கு பெரியம்மா வீட்டிற்கு சென்றிருந்தாள். மயங்கி கிடந்த நான் அவர்களது காரின் உள்ளே கிடத்தப்பட்டேன். கார் அந்த அமாவாசை இருளைக் கிழித்துக்கொண்டு பறந்து சென்றது. சற்றைக்கெல்லாம் நான் லீவு நாட்களில் வகுப்பு கொடுக்கும் பொது நோக்கு மண்டபத்திற்கு கார் வந்து சேர்ந்தது. ஏதோ முன்பே சொல்லி வைத்ததுபோல் நால்வர் அங்கு நின்றிருந்தனர். என்னை அழுங்காமல் குலுங்காமல் தூக்கி சென்று பொது நோக்கு மண்டபத்தினுள்ளே தொங்கிக்கொண்டிருந்த கயிற்றில் என் கழுத்தை நுழைத்து தூக்கினார்கள். எனது இறப்பு என்னால் உணரமுடியாத ஒன்றாகவே என்னை அரவணைத்துக்கொண்டது.
பாக்குமரங்களை வெட்டி கலர் கலராக பேப்பர்கள் ஒட்டி அலங்கரிக்கப்பட்டு பாடை தயாாராகிக்கொண்டிருக்கின்றது. மேளக்காரன் தனது திறமையை ஒன்று திரட்டி வெளிப்படுத்திக்கொண்டிருந்தான்..அம்மா இப்போதும் அழுது கொண்டிருக்கின்றாள்… படித்து உழைத்து குடும்பத்தை பார்ப்பான் என்று நம்பிய என் அம்மாவையும், தாலி கட்டாத என், மனைவியையும் கருவில் துளிர்த்துக்  கொண்டிருக்கும் என் குழந்தையையும்  விட்டு நான் இப்போது போய்க்கொண்டிருக்கின்றேன். நீண்ட தூரம் வந்து விட்டேனோ?
கஜீ தமிழ்மகன்-இலங்கை