இனத்தின் தொன்மம் மரபுகளைப் பேணும் ஒரு அரசியல் வடிவமே தைப்பொங்கல்!

தைப்பொங்கல் என்பது உழவர் திருநாளாக தமிழர்கள் கடைப்பிடித்து வந்தபோதும் தமிழீழ விடுதலைப்போராட்டம் வீச்சு பெற்று புலிகளின்ஆளுகைக்குள் தமிழீழத்தின் பெரும்பகுதி வந்தபோது அது தமிழர் திருநாளாகவும் தமிழ்ப் புத்தாண்டாகவும் எந்த அறிவிப்புமின்றியே இயல்பாக மாறியது.


 கருணாநிதி தமிழக  முதல்வராக இருந்தபோது அரச அறிவிப்பாக தமிழகத்தில் இதை முன்மொழிந்த போதும் தமிழீழத்தில் ஏற்கனவே இது நடைமுறைக்கு வந்து விட்டது.

பலர் இது இந்துக்களின் விழா என்று கருதுகிறார்கள். இது தவறு. தமிழீழத்தில் கிறிஸ்தவர்கள் கூட இதை விமர்சையாகக் கொண்டாடுவார்கள்.

ஒரு போராடும் இனமாக தமது தொன்மம் மரபுகளை தொடர்ந்து பேணவேண்டியதன் அவசியம் கருதியும் தமது தனித்துவ அடையாளத்தை நிலைநிறுத்தவும் புலிகளின் ஆட்சி காலத்தில் தமிழர்கள் தைத்திருநாளை விமர்சையாகக் கொண்டாடினார்கள்.

இனம், மொழி, பண்பாடு என்ற தளத்தில் (உழவர்களின் அதாவது உழைப்பவர்களின்) நிலத்தை குறியீடாக்கும் ஒரு நிகழ்வு இது.

நமது போராட்டமே நில மீட்புத்தானே! ஒரு இனம் என்ற அடையாளம் நிலத்தை மையப்படுத்தி இந்த அடிப்படையில்தான் நிலைநிறுத்தப்படுகிறது.

ஆனால் மே 18 இற்கு பிறகு தமிழர் தாயகம் எங்கும் தமிழர்களின் கலை, பண்பாடு, கலாச்சார அடையாளங்கள் சிதைக்கப்பட்டு பவுத்த மேலாதிக்கமும் பவுத்த மதமும் தீவிரமாக விதைக்கப்பட்டு வரும் சூழலை நாம் அறிவோம். இன அழிப்பிற்கு பிறகான இனச்சுத்திகரிப்பு இது.

இந்த தைப்பொங்கல் – தைத்திருநாள் அது சார்ந்த வழிபாட்டு முறைகள் தமிழர்களின் தொன்மம், மரபுகளை தொடர்ந்து பேணுவதும் அதை மீட்டெடுக்கும் அலகாகவும் தமிழ் அடையாளங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.

எனவேதான் இந்த இக்கட்டடான சூழலிலும் நாம் இன்று விமர்சையாக தாயகத்திலும் புலத்திலும் இதை கொண்டாட உந்தப்பட்டுள்ளோம்.

இது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு எதிர்வினையாக மட்டுமல்ல தொடர்ந்து தமிழீழத்தில் எமது தொன்மம் மரபுகளை பேணும் ஒரு எதிர்ப்பு அரசியல் வடிவமாகவும் இருக்கிறது.

தைத்திருநாளை நாம் பேரழிவிற்கும் பெரும் துயரத்திற்கும் பின்னும் கொண்டாடுவதன் பின்னணி இதுதான்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.