விடியுமா தமிழா் தாயகம்?

உலகம் தனை எழுப்பி 
உய்விக்கும் ஆதவனே
மெய் வருத்தும் எமதருமை 
விவசாயப் பெருமக்கள் 
உமக்காக சமா்ப்பிக்கும்
நன்றியின் நாளிதனில் 
சேற்றிலே உழல்கின்ற 
அவா் பெருமை போற்றிடவே
சொரிகின்றோம் நன்றியினை
நாமவா்க்கு கனதியுடன். 

உழவர் திருநாளாம் தைத்திருநாள் உலகளாவிய ரீதியில் அனைத்து தமிழ் இந்து மக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.  இத்திருநாள் நன்றியின் பிரதிபலிப்பாக கொண்டாடப்படுகின்றது.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை,
செய்நன்றி கொன்ற மகா்க்கு. என்கிறது திருக்குறள்.

மனிதநேயத்தில் முக்கியமான ஒன்று நன்றி பகிர்தல். அதனை நாம் ஒவ்வொருவரும் உணா்ந்து நடத்தலே சிறப்பானதாகும். அதாவது விவசாயத்திற்கு உதவும் சூரிய பகவானுக்கும் கால்நடைகளுக்கும் நன்றியைக் கூறும்  ஒரு விழாவாகவே இது அமைகின்றது. உழவா்கள் மட்டுமல்லாது மனித ஜீவராசிகள் அனைவருமே இந்நாளில் நன்றி செலுத்தவேண்டியவா்களே. அதன் பிரதிபலிப்பாக அமையும் இந்நாள் அனைவருக்கும் திருநாளே.
தமிழர் திருநாளானது  இலங்கை, தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் தஅனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா மதங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.  இது நான்கு நாட்கள் பண்டிகையாகக் கொண்டாடப்படும் ஒன்றாகும். போகிப்பொங்கல், தைப்பொங்கல், காணும்பொங்கல், பட்டிப்பொங்கல் என்பவையே அவை.

வரலாற்று ரீதியாக பார்க்குமிடத்து சங்ககாலத்தில்,  அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் நாம் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது என்ற வரலாற்றுக்கதை அனைவர் மத்தியிலும் பிரபலமாக நினைவூட்டப்பட்டு வருகின்றது.

 அரசியல் கைதிகளின் பிரச்சினையும் காணாமல் போனோரின் பிரச்சினையும்  எம்முன்னே இருக்கும் தீராத வலிகளாகும். அவை இரண்டும் எப்போது தீா்க்கப்படுகின்றதோ அன்றுதான் தமிழ் மக்கள் வாழ்வில் ஓரளவேனும் மகிழ்ச்சி என்பது கிட்டும். இது இப்படியிருக்க தமிழா்களின் பாரம்பரிய இடங்களில்  பொங்கல் வைப்பதற்கு தடை விதிக்கின்ற நிலையும் தற்போது உருவாகியுள்ளது. இது எங்கே, எப்படி முடியுமோ என்ற மனப்பதற்றமும் பயமும் மக்களின் மனங்களை ஆக்கிரமித்துள்ளதென்பதை யாராலும் மறுக்கமுடியாது.
இந்த தைத்திருநாளேனும் தமிழா்களுக்கு விடிவினைத் தருமா‘ என்ற கேள்வி அனைத்து மக்களின் மனங்களிலும் உள்ளதே. நாட்டு நிலவரங்கள் பலதரப்பட்ட பிரச்சினைகளை எழுப்பி தட்டுத்தடுமாறி ஓரளவு பழையநிலைக்குத் திரும்பியுள்ளது எனினும் தமிழா்களுக்கான அரசியல் தீா்வு கிட்டுமா என்பது கேள்விக்குறியே.

காரணம், நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் மாறும் தென்னிலங்கையின் அரசியல் நிலவரம்.  இந்நிலையில் எமக்கான மீட்சி கிட்டுமா என்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு நன்மை பயக்கும் ஒன்றாக அமையவேண்டும் என்பதே இத்திருநாளின் எதிர்பார்ப்பாகும்.
ஒவ்வொரு பொங்கலும்,  விடியவேண்டும் என்ற ஏக்கத்தோடுதான் நகா்கின்றது. அதே வலியோடும் ஏக்கத்தோடும் இந்த ஆண்டின் பொங்கலும் கடக்கிறது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.