பிலிப்பைன்ஸில் வாழும் இலங்கையர்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை – மைத்திரி!

பிலிப்பைன்ஸில் வாழும் இலங்கையர்களின் பிரச்சினைகளை தீர்த்து அவர்களுக்கு தேவையான மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் விசேட அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு அரசமுறை பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது ஜனாதிபதிக்கும், பிலிப்பைன்ஸில் வாழும் இலங்கையர்களுக்கும் இடையில் மனிலாவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

உயர் கல்விபெறும் மாணவர்கள், தொழில்வல்லுனர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டதுடன், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.

உயர் கல்விபெறும் மாணவர்களின் பிரச்சினைகள், விசா பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போன்ற விடயங்கள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

அனைத்து பிரச்சினைகளையும் பிலிப்பைன்ஸுக்கான இலங்கை தூதுவரிடம் முன்வைக்குமாறு குறிப்பிட்ட ஜனாதிபதி, பிலிப்பைன்ஸ் அரசாங்கத்துடன் கலந்துரையாடி இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

தற்பொழுது இலங்கைக்கு முக்கிய சவாலாக உள்ள போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்கு தனது வழிகாட்டலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் விரிவான நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும், ஜனாதிபதி பிலிப்பைன்ஸில் உள்ள இலங்கையர்களுக்கு விளக்கிக் கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சித் திட்டங்களை பலப்படுத்துவதற்கு இவ்வருடம் ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்திலிருந்து மற்றுமொரு முக்கிய நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

தனது பிலிப்பைன்ஸ் விஜயத்தில் இரண்டு நாடுகளுக்கிடையிலும் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இருதரப்பு உடன்பாடு பற்றியும் இலங்கையர்களுக்கு விளக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த இணக்கப்பாட்டினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.