போதைப்பொருள் சார்ந்த முறைப்பாடுகளுக்கு ஜனாதிபதியால் அழைப்பு இலக்கம் அறிமுகம்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் அங்கு வைத்து போதைப்பொருள் தொடர்பான முறைப்பாடுகளுக்காக புதிய இலக்கம் ஒன்றினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்துள்ளார். இதன்படி 1984 எனும் சுருக்க இலக்கத்தினூடாக எந்தவித கட்டண அறவீடுகளுமின்றி போதைப்பொருள் குற்றம் சார்ந்த உடனடி முறைப்பாடுகளை மேற்கொள்ளமுடியும் என கூறப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் இன்றிலிருந்து எதிர்வரும் 28ஆம் நாள்வரை கடைப்பிடிக்கப்படுகின்ற நிலையில் இதன் தொடக்க நிகழ்வு முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலக ஏற்பாட்டில் கடைப்பிடிக்கப்படும் இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு மேற்போன புதிய இலக்கத்தினை பிரகடனம் செய்துவைத்தார். வீடு மற்றும் பொது இடங்களில் போதைப்பொருள் பாவனையின் காரணமாக மக்கள் இதுவரை பல்வேறுபட்ட அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்துள்ளனர். இதுதொடர்பான உடனடி முறைப்பாடுகளை மேற்கொள்ளமுடியாமல் பல சிரமங்களை மக்கள் சந்தித்துவந்துள்ளனர். குறிப்பாக போதைப்பொருள் காரணமாக வீட்டில் இடம்பெறும் குடும்ப வன்முறை, பொது இடங்களில் பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் யாரிடம் முறையிடுவது என்ற நிலை காணப்பட்டுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டே மக்களின் நன்மை கருதி இந்த புதிய இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இலக்கத்தின்மூலம் எங்கிருந்தும் போதைப்பொருள் சார்ந்த அறிவிப்பினை மேற்கொளமுடியும் என கூறப்பட்டுள்ளதுடன் இதற்காக கட்டணம் எதுவும் அறவிடப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த அதிரடி நடவடிகையின் காரணமாக மக்கள் மத்தியில் மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.