குடிநீர் இன்றி தவித்த மாணவர்கள்!

குடியரசு தின விழா கலைநிகழ்ச்சி ஒத்திகையில் வெயிலிலும், குடிநீரின்றி தவித்த பள்ளி மாணவ, மாணவிகள்..


ஆண்டுதோறும் ஜனவரி 26-ம் தேதி இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் குடியரசு தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி வரும் சனிக்கிழமை 26-ம் தேதி எழுபதாவது குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ளது. இதற்கான கலைநிகழ்ச்சிகளின் ஒத்திகை பல்வேறு இடங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில்  நடத்தப்பட்ட ஒத்திகை விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளை வாட்டி வதைக்கும் வெயிலிலும், குடிநீரின்றி தவித்த அவலம் அரங்கேறி, பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த புதன்கிழமை மதியம் 12 மணிக்கு, காந்தி விளையாட்டு மைதானத்தில் 300க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் கலைநிகழ்ச்சி என்ற பெயரில் மாணவ, மாணவிகளை உச்சிவெயிலில் நிறுத்தி, ஒத்திகை நடத்தினர்.

இதில் ஆத்தூர் அருகில் உள்ள வெள்ளிக்கவுண்டனூர் ஜி.டி.ஆர் (அரசு மலைவாழ் உண்டு் உறைவிட பள்ளி)  மாணவிகள் கால்களில் செருப்பு கூட இல்லாமல் சுடும் மணலின் வெப்பம் தாங்காமல் அவதியில் துடித்தனர். பயிற்சியளித்துக் கொண்டிருந்த ஆசிரியைகள் வெயிலின் தாக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் தங்களது சேலைகளால் தலையை மூடிய படி வியர்வையில் நனைந்தபடி இருந்தார்கள்.

இதில் இன்னொரு கொடுமை இவர்களுக்கு போதிய குடிநீர் வசதி ஏதும் ஏற்பாடு செய்யவில்லை. ஆசிரியர்களும், மாணவர்களும் நாவரண்டு தாகத்தில் குடிநீர் தேடி பரிதவித்தார்கள். ஆண்கள் சிறுநீர் கழிப்பிடம் அருகே உள்ள குடிநீர் குழாயில், பெண் மாணவிகள் தண்ணீர் பிடித்துச் சென்றக் காட்சி அவலத்திலும் அவலம்.
மாலை நான்கு மணிக்கு மேல்தான் இந்த ஒத்திகைகள் நடத்த வேண்டும் என்பதுதான் விதிமுறைகள் என்கிறார்கள். இதைமீறி ஏன் மாவட்ட நிர்வாகமும், விளையாட்டு துறை அதிகாரிகளும் இப்படிப்பட்ட அவலத்திற்கு காரணமாக இருந்தார்கள் என்பது புரியாமல் பெற்றோர்கள் ஆதங்கத்தில் உள்ளார்கள்.

வரும் நாட்களிளாவது இந்த அவலங்கள் அரங்கேறாமல் இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.