கச்சதீவு திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு அருட்தந்தை வேண்டுகோள்!

கச்சதீவு திருவிழாவில் கலந்துகொள்ளும் தமிழக பக்தர்கள், அதற்கான விருப்ப மனுக்களை வரும் பெப்ரவரி 25ம் திகதிக்குள் படகு உரிமையாளரிடம் வழங்க வேண்டும்” என, ராமேஸ்வரம் பாதிரியார் தெரிவித்துள்ளார்.


ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவில் உள்ள கச்சதீவில், அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பெப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் 2 நாட்கள் கோலாகலமாக நடைபெறும் இதன் திருவிழாவில் தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் பங்கேற்பது வழக்கம்.

இந்நிலையில், 1982ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இனப்போர் காரணமாக, இந்த திருவிழாவுக்கு இலங்கை அரசு தடை விதித்தது. 2009ம் ஆண்டு, போர் முடிவுக்கு வந்து அமைதி நிலவியதும், 2010 முதல் கச்சத்தீவு திருவிழா நடத்தப்பட்டு, தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.

அதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழா வரும் மார்ச் மாதம் 15 மற்றும் 16ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பு கடிதத்தை, யாழ்ப்பாணம் முதன்மை குரு சேசுதாஸ் ஜெபரத்தினம், ராமேஸ்வரம் அருட்தந்தை தேவசகாயத்திற்கு அனுப்பியுள்ளார்.

இது குறித்து, ராமேஸ்வரம் அருட்தந்தை தேவசகாயம் கூறியதாவது: “கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழாவை, வரும் மார்ச் மாதம் 15ம் திகதி நெடுந்தீவு அருட்தந்தை எமிலிபோல் கொடியேற்றி தொடங்கி வைக்கிறார். மார்ச் 16ம் திகதி, யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம், முதன்மை குருக்கள் மற்றும் தமிழக அருட்தந்தைகள் ஒருங்கிணைந்து திருவிழா திருப்பலி நடத்த உள்ளனர்.

இந்த விழாவில் பங்கேற்கவுள்ள தமிழக பக்தர்களின் வசதிக்காக, மார்ச் மாதம் 15ம் திகதி ராமேஸ்வரத்தில் இருந்து 63 விசைப்படகுகள் கச்சதீவு செல்ல உள்ளன. விழாவுக்கு செல்லும் பக்தர்கள் அதற்கான விருப்ப மனுக்களை படகு உரிமையாளரிடம் பிப்ரவரி 1 முதல் 5ம் தேதிக்குள் பெற்று, பிப்ரவரி 25ம் திகதிக்குள் படகு கட்டணம் நபர் ஒருவருக்கு 1,300 ரூபாயுடன் வழங்க வேண்டும்.

பக்தர்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், போதை வஸ்துகளை எடுத்துச் செல்லக் கூடாது. விண்ணப்ப படிவத்தில் இணைத்த அரசு அடையாள அட்டையின் அசலை எடுத்து வர வேண்டும். மார்ச் 16ம் திகதி கச்சதீவில் திருவிழா திருப்பலி பூஜை முடிந்ததும், அங்கிருந்து படகில் புறப்பட்டு ராமேஸ்வரத்திற்கு திரும்ப வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.