எடப்பாடியுடன் கருணாஸ் சமரசம்!

சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை வாபஸ் பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப்
பேசியிருக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தினகரன் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். இதற்கிடையே முதல்வர் மற்றும் காவல் துறையை கடுமையாக விமர்சித்த கருணாஸ் மீது, நுங்கம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இவ்வழக்கில் ஜாமீன் கிடைக்க இருந்த நிலையில், ஐபிஎல் போராட்ட வழக்கிலும் கைது செய்யப்பட்டார். இவ்விரு வழக்குகளிலும் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த கருணாஸ், இது அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றம் சாட்டியிருந்தார்.
அரசுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி விளக்கம் அளிக்க வேண்டுமென கருணாஸுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து சபாநாயகர் தனபால் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டி, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென தனிநபர் தீர்மானத்தை கருணாஸ் முன்மொழிந்திருந்தார்.
2019ஆம் ஆண்டுக்கான சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று (ஜனவரி 2) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இன்றைய கூட்டத்துக்கு இன்செய்து பார்மல் லுக்கில் வந்திருந்த கருணாஸ், சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்த கருணாஸ், பூங்கொத்து கொடுத்து புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியும் உடனிருந்தார்.
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கருணாஸ், “சிவகங்கை மாவட்டத்தில் மருது பாண்டியருக்கு சிலை வைக்க வேண்டும் என்பது எங்களின் நீண்ட நாள் கோரிக்கை. பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட முத்துராமலிங்கத் தேவரின் வரலாற்றை இந்த ஆண்டு சேர்க்க வேண்டும். திருவாடனை தொகுதியிலுள்ள கண்மாய்கள் அனைத்தையும் தூர்வார வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரை சந்தித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வரை சந்திக்கவில்லை என்று தெரிவித்த அவர், “திருவாடனை தொகுதி ஏற்கனவே வறட்சியான தொகுதி. கடந்த இரண்டு வருடங்களாக தூர்வாரக் கேட்டுக் கொண்டும் இன்னும் தூர்வாரப்படவில்லை. என்னுடைய தொகுதிக்கு முதல்வர் எந்தவிதமான நலத் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. எனவே முதல்வரை சந்தித்து, காழ்ப்புணர்ச்சியுடன் என்னை பார்க்கக் கூடாது, சட்டமன்ற உறுப்பினர் என்பதன் அடிப்படையில் என்னுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினேன்” என்றும் விளக்கினார்.
மேலும், “ ஆளும் தரப்பினர் அதிகமாக இருப்பதால் சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் தோல்வியடையும் என்று வழக்கறிஞர்கள் கூறினர். அதன் காரணமாகவே அந்தத் தீர்மானத்தை வாபஸ் பெற்றேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.