கொக்கிற்கு தட்டத்தில் பால் விருந்திடும் ரணிலின் தந்திரமும்!

டொனமூர் முதல் சிறிசேன வரை (1931 – 2016) என்ற தலைப்பில் மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய
நூல் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே அதனை வெளிப்படுத்தியிருந்தது
தொடர்ந்தும் ‘ஒற்றையாட்சி’ முறையே இலங்கையில் நீடிக்கும்.  வரயிருக்கும் புதிய அரசியல் யாப்பு வரைவில் ஒற்றையாட்சி என்ற பதமே சிங்களம்-தமிழ்-ஆங்கிலம் என்ற மூம்மொழிகளிலும் தெளிவாக எழுதப்பட்டிருக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் முதலாம் தேதி ஐ தே க வின் தலைமைச் செயலகமான ஸ்ரீகோதாவில் நிகழந்த ஆளும் தேசிய ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கும் இரண்டு தினங்களுக்கு முன் கண்டி தலதா மாளிகாவிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க அஸகிரிய, மல்வத்த பீடாதிபதிகளிடம் பின்வருமாறு உறுதிபடக் கூறினார். ‘சமஷ்டி’ என்பதற்கு இடமில்லை என்றும் பௌத்த மதத்திற்கு அரசியல் யாப்பில் ஏற்கனவே இருக்கும் முதன்மை ஸ்தானத்தில் எந்த மாற்றமும் நிகழாது என்றும் ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ளவாறே ஒற்றையாட்சி முறை என்பதே நீடிக்கும் என்றும் உறுதியளித்திருந்தார். அதனை மெய்ப்பிக்கும் வகையில் மேற்படி ஸ்ரீகோதாவில் நடந்த ஆளும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்க கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இனியும் சமஷ்டி பற்றியும், அரசியல் தீர்வு பற்றியும் தமிழ்த் தலைவர்களால் பொய் கூறுவதை நம்பவும் முடியாது, தமிழ் மக்கள் ஏமாறவும் முடியாது.

2016ஆம் ஆண்டு இக்கட்டுரை ஆசிரியர் இலங்கை அரசியல் யாப்பு : டொனமூர் முதல் சிறிசேன வரை (1931 – 2016) என்ற தலைப்பில் எழுதிய நூல் முறையே வவுனியாவிலும், யாழ்ப்பாணத்திலும் வெளியானது.
அப்போது வவுனியாவில் நிகழ்ந்த வெளியீட்டு விழாவில் உரை நிகழ்த்திய பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்கள் இந்நூல் வரயிருக்கும் தீங்கினை முன்கூட்டியே கூறும் ‘ஓர் ஆபாய  எச்சரிக்கை மணி’ என்று நூலை வரவேற்று தமிழ்த் தலைவர்களை நோக்கி முன்யோசனையுடன் நடக்குமாறு உறுதிபடக் கூறினார்.

இந்நூல் வெளிவந்த காலத்தில் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் நடந்த வெளியீட்டு விழாவின் போது  இந்நூலை பெரிதும் வரவேற்று எழுதி அனுப்பிய உரை படிக்கப்பட்டது. அத்துடன் வவுனியாவிலும், யாழ்ப்பாணத்திலும் நடந்த வெளியீட்டு விழாக்களின் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணித் தலைவர்களும், ஈபிஆர்எல்எப் தலைவர்களும், பல்கலைக்கழக அறிஞர்களும், பத்திரிகையாளர்களும் மற்றும் சமூக, மதத் தலைவர்களும் வரவேற்று உரை நிகழ்த்தியிருந்தனர்.

புதிய அரசியல் யாப்பின் மூலமான அரசியல் தீர்வு என்பதும், போர்க்குற்ற விசாரணை, காணமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு, நல்லாட்சி, நல்லிணக்கம் என்பனவெல்லாம் சர்வதேச அரங்கில் இனப்படுகொலையால் அவமானப்பட்டு நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் இலங்கை அரசை மீட்பதற்கான சிங்களக் கட்சித் தலைவர்களினது கூட்டுச் சதியும், ஏமாற்றுமே என்றும் இந்நூல் தெளிவுபட முன்கூட்டியே கூறியது.

இந்நூலின் முடிவுரையிலுள்ள சில பகுதிகளை மட்டும் இங்கு நினைவுறுத்த வேண்டிய வரலாற்று அவசியமாக உள்ளது.
அதாவது நூலில் உள்ளவாறே :-
“முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குற்றத்துக்குள் சிக்குண்டு, சர்வதேச அரசியலில் மீளமுடியாத நிலையில் காணப்பட்ட இலங்கை அரசை இன்றைய சிங்களத் தலைவர்கள் மீட்டெடுத்திருக்கும் விதமும் அதற்கு யுத்தத்தால் அழிவுக்குள்ளாக்கப்பட்ட தமிழ்த் தரப்பையே பயன்படுத்தி வெற்றி பெற்ற சாமர்த்தியமும், போர்க்குற்ற விசாரணையில் இருந்து குற்றம் புரிந்தவர்களையும் கூடவே பாதுகாத்திருக்கும் விதமும் உலகளாவிய இராசதந்திர வரலாற்றில் தனி முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாயமாகும்.

சர்வதேச தலைவர்களினதும், தமிழ்த் தரப்பினரதும் கண்ணுக்குள் மண்ணைத்தூவி தாம் தப்பித்துக் கொண்ட விதத்தில் சிங்கள இராசதந்திரம் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்திருக்கிறது.
இத்தகைய வெற்றியைத் தொடர்ந்து இன அழிப்பை இலகுவாக நிறைவேற்ற ஏதுவான இனக் கபளீகரக் கொள்கையை (Policy of Assimilination)  மிகத் திறமையாகத் திட்டமிட் டு அதை சர்வதேச சமூகத்தினதும், தமிழ்த் தரப்பினரனதும் அனுசரணையுடன் நிறைவேற்றும் முயற்சியில் சிங்கள அரசாங்கம் திறமையுடன் செயற்பட்டு வருகிறது.

இந்த இனக் கபளீகரக் கொள்கையை முள்ளிவாய்க்கால் யுத்தம் - 3 என அழைக்கலாம். இராணுவ வழியிலான இன அழிப்பு கண்ணுக்குத் தெரியக்கூடிய, இரத்தம் தோய்ந்த, அபகீர்த்திக்குரிய ஒன்றாய் அமையும் அதேவேளை, இந்த இனக் கபளீகர வழியிலான இன அழிப்பானது தோலிருக்க சுளை பிடுங்கும் அதி நுணுக்கமான வித்தையைக் கொண்டதாய் அமைகிறது.

காலனிய ஆதிக்க ஆரம்ப காலத்திலிருந்தே இலங்கைத் தீவை பிரித்தானியர் தமது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தது இலங்கையில் தாம் பெறத்தக்க பொருளாதார வளங்களுக்காக அல்ல. அதற்கப்பால் இந்தியாவைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்காகவும், பரந்த இந்து சமுத்திரத்தில் தமது ஆதிக்க நலன்களைப் பேணுவதற்காகவுமான கேந்திரத் தளமாக, இலங்கையை பிரித்தானியர் கருதினர்.

ஆரம்பத்தில் பிரித்தானியர் தமிழர்களை அரவணைத்து இலங்கையை ஆளவும், அதன் மூலம்  இலங்கையைக் கேந்திரமாகக் கொண்டு இந்தியாவின் மீது ஆதிக்கம் புரிவதற்குமான கொள்கையைக் கொண்டிருந்தனர். ஆனால் 1920களிலிருந்து ஈழத் தமிழர்கள் இந்தியாவுக்கு ஆதரவாகவும், இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்துடன் தம்மை இணைத்துக் கொண்டும் செயல்பட்டதனால், இலங்கைக்கான பிரித்தானியரின் காலனிய ஆதிக்கக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது. இதன் விளைவாக சிங்களவர்களை அரவணைத்து தமிழர்களுக்கும், இந்தியாவுக்கும் எதிரான அரசியல் நிலைப்பாட்டை மேற்கொண்டனர். இக்கொள்கை மாற்றத்தின் விளைவாக சிங்களவர்களை அரவணைப்பதற்காக தமிழர்களுக்கு எதிரான அரசியல் யாப்புக்களை உருவாக்கும் மரபு 1931ஆம் ஆண்டு இலங்கையில் டொனமூர் யாப்புடன் தெளிவாகத் தோற்றம் பெற்றது.” – பப : 108-109

“இந்தப் புவிசார் அரசியல் சார்ந்த நிலைப்பாடுதான் தமிழர்களின் கழுத்தில் சுருக்குக் கயிறாய் விழுந்தது. இதன் தொடர்ச்சியாக ஈழத் தமிழரை இந்தியாவுடன் தொடர்புபடுத்தியே அனைத்து உலக நாடுகளும் சிந்திக்கும் நிலை உருவானது. ஆதலால் இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு நாட்டினது நிலைப்பாடும் ஈழத்தமிழருக்கும் எதிரான நிலைப்பாடாக வடிவம் பெற்றது. இந்த யதார்த்தத்தை சிங்களத் தலைவர்கள் சரிவரப் புரிந்து, வரலாற்று ரீதியான இந்திய ஆதிக்கத்திற்கு எதிரான தமது அரசியலை ஈழத் தமிழருக்கு எதிரான அரசியல் யாப்புகள் மூலம் முன்னெடுத்து வந்திருக்கின்றனர்.
இதன்படி இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் நிலைப்பாட்டோடு சிங்களத் தலைவர்கள் தமது நலன்களையும் இணைத்து தமிழருக்கு எதிரான அரசியலை உலக அளவில் முன்னெடுத்து வருகின்றனர். இது காலம் காலமாய் இலங்கையின் அனைத்து யாப்புகளிலும் பிரதிபலிக்கிறது. ப : 110

21ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்,  இந்திய உபகண்டத்தில் சீனா நுழையத் தொடங்கியபோது, அதனையும் சிங்கள ஆட்சியாளர்கள் இந்தியாவுக்கும் ஈழத்தமிழருக்கும் எதிரான சக்தியாக பயன்படுத்திக் கொண்டனர். அக்காலக் கட்டத்தில் சீனாவின் பிரவேசம் மேற்குலகுக்கும், இந்தியாவுக்கும் பாதகமாக அமைந்ததால் இருவருக்கும் சீனா பொது எதிரியாக அமைந்தது.

இச்சூழலில் மேற்குலகின் பூகோள நலனும், இந்தியாவின் பிராந்திய நலனும் ஒன்றிணையும் ஒரு தற்காலிகப் புள்ளி காணப்படுகிறது. அந்தப் புள்ளியை பாதுகாக்கும் அளவுக்கே புதிய அரசியல் யாப்பில் தமிழருக்கான தீர்வு முன் வைக்கப்படும். பதவியிலிருக்கும் சிங்களத் தலைவர்களுக்கு, பூகோளம் தழுவிய இந்தப் பிராந்தியம் சார்ந்த புவிசார் அரசியல் யதார்த்தம் நன்கு புரியும் என்பதால், தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைப்பதில் தமது ஆட்சிக்கு நெருக்கடி இருக்கின்றது என்பதைப் பெரிதுபடுத்திக் காட்டி அதன் மூலம் மேற்படி அரசுகளின் ஆதரவுடன் தமிழ் மக்களுக்கான தீர்வை அற்பமாகச் சுருக்கி தம் இலக்கை அடைந்திடுவர். பப : 110-111

ஈழத் தமிழரின் பாதுகாப்பிலேயே இந்தியாவின் பாதுகாப்பும் அடங்கியுள்ளது என்கிற உண்மையை இந்தியா உணரும் முன்பே ஈழத்தமிழர் இலங்கைத் தீவிலிருந்து முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டு விடுவார்களோ என்கிற அச்சமும் மனதில் எழுகிறது.

இவ்வாறு டொனமூர் காலத்திலிருந்து சிறிசேன காலம் வரையிலும் காணப்படும் பூகோள - பிராந்திய புவிசார் நலன்களின் பின்னணியில் தமிழரின் நலன்கள் பலியிடப்பட்டு அதற்கேற்ப அரசியல் யாப்புக்கள் உருவாக்கப்படும் மரபு இனியும் தொடரும் என்பதைத் தமிழ் மக்கள் பெரிதும் கருத்தில் கொள்ளவேண்டும்.

தன்னை ஒரு “Pragmatist” என்றும், தேவை ஏற்படும்போது, தான் “பிசாசோடுகூட கூட்டுச் சேருவேன்“ என்றும், ஜே.ஆர்.ஜெயவர்த்தன முன்பு குறிப்பிட்டிருந்தார். இது இன்றுவரை அனைத்து சிங்கள ஆட்சியாளர்களுக்கும் தாரக மந்திரமாக இருந்து வருகிறது. இதையே இன்றைய ஆட்சியாளர்களும் சர்வதேச உறவைக் கையாள்வதில் பின்பற்றுகின்றனர். இதில் அவ்வப்போதைய நடைமுறைக்கேற்ப தமது நீண்டகால எதிரியை தற்காலிக நண்பனாகக் கையாளவும், தற்காலிக நெருக்கடிகளைக் கடந்த பின்பு, தற்காலிக நண்பர்களின் காலை வாரிவிட்டு தங்களது நீண்ட கால நோக்கினை அடையவும் அவர்களால் முடியும். தற்காலிக அணைப்பிலும் கூட தமது நீண்டகால நலன்களைப் பலியிடாத சாமர்த்தியம் அவர்களிடம் உண்டு.

ஈழத் தமிழரை ஒடுக்க தற்காலிகமாக இந்தியாவைத் திருப்திப் படுத்துவது, தமிழரை நிரந்தரமாக ஒழித்து இந்தியாவுக்கு இலங்கையில் காலூன்ற இடமின்றிச் செய்வது என்கிற மூலோபாயத்துடன் சிங்களத் தலைவர்கள் செயல்படுகின்றனர்.
“சிங்களத் தலைவர்கள் இத்தகைய திறனுடன் தற்போது காணப்படும் புவிசார் அரசியல் யதார்த்துக்குப் பொருத்தமானதும், தமக்குச் சாதகமானதுமான சர்வதேச சக்திகளைக் கையாள்வதன் மூலம் தமிழர்களுக்கான தீர்வை மேலும் குறுகத் தறிக்கப் போகிறார்கள் எனத் தெரிகிறது. பப: 111-112

1977ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெவர்த்தன பிரகடனப்படுத்திய “தார்மீக அரசாங்கம்”  (தர்மிஷ்ட-தர்மம் நிறைந்த அரசாங்கம்) என்ற கொள்கையும், 1995 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கம் முன்வைத்த “சமாதானத்திற்கான யுத்தம்”  (“War for Peace”)  என்ற கொள்கையும்,  இன்றைய சிறிசேன - ரணில் அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கும் “நல்லாட்சி அரசாங்கம்”, “இன நல்லிணக்கம்” என்ற கொள்கைகளும், 1947ஆம் ஆண்டு ஜோர்ஜ் ஓவல்(George Orwell)  எழுதியNineteen Eighty-Four – Or 1984  என்ற நவீனத்தில் வரும் பின்வரும் தீர்க்க தரிசனம் மிக்க வரிகளை, இலங்கையின் தற்கால அரசியலில் மெய்ப்பித்து நிற்கின்றது.
யுத்தமே சமாதானம் - War is Peace   அடிமைத்தனமே சுதந்திரம் -Freedom is Slavery”
- ப : 112

மொத்தத்தில் தமிழின அழிப்புக் கொள்கையே ஐக்கிய தேசியக் கட்சியினதும், சுதந்திரக் கட்சியினதும், ஏனைய சிங்களக் கட்சிகளினதும் கொள்கை என்றும் ஆதலால் சமாதானம் என்பது இன அழிப்பே என்றும் முள்ளிவாய்க்காலில் இராணுவ ரீதியாக முன்னெடுத்த இனப்படுகொலையை நல்லாட்சி அரசாங்கம் அரசியல் ரீதியாக பாதுகாத்து முன்னெடுக்க முனைகிறது. அதுவே புதிய அரசியல் யாப்பின் மூலமான அரசியல் தீர்வு என்ற ஏமாற்றுகரமான தந்திரமாகும் என்ற கருத்தை இந்நூல் முன்வைத்துள்ளது.

இறுதியாக இந்நூல் அதன் பின்னிணைப்பில் பின்வருமாறு கூறியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் தமிழ்த் தரப்பினர் அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது எழுமாத்திரமான அரசியல் அணுகுமுறைகளை மேற்கொள்ளாது தொலைதூர நோக்குடன் கூடிய அறிவார்ந்த, புத்திபூர்வமான திட்டமிடப்பட்ட வகையில் அவற்றை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

“முள்ளிவாய்க்கால் பெருந்துயரத்திற்கான காரணங்கள் கடந்த ஒரு நூற்றாண்டுகால அரசியலில் விரவிக்கிடக்கின்றன. இந்த நூற்றாண்டுக்கணக்கான தோல்விகளுக்கான காரணங்களை எல்லாம் சரிவரக் கண்டறிந்து தோல்விக்கான காரணங்களைத் தவிர்த்து வெற்றிக்கான காரணங்களைத் தேடவேண்டிய தலையாய பொறுப்பு முதற்கண் தமிழர் பக்க அறிஞர்களுக்கு உண்டு.” – ப : 115 என்று  இந்நூலில் கூறப்பட்டுள்ளமை இக்காலகட்டத்தில் மனதில் நிறுத்திக் கொள்வது எதிர்காலத்திற்கான அறிவியல் பார்வைக்கு அவசியமாகும்.

No comments

Powered by Blogger.