ரஃபேல்: கொந்தளித்த நிர்மலா சீதாராமன்

ரஃபேல் விவகாரம் குறித்து மக்களவையில் பதிலளித்துப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை ஆவேசமாக விமர்சித்தார்.

ரஃபேல் விவகாரம் தொடர்பாக இன்று (ஜனவரி 4) மூன்றாவது நாளாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரஃபேல் விமானத்தின் விலையில் எந்த பாதுகாப்பும் இல்லை. எனது கேள்வி அனில் அம்பானிக்கு எப்படி ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அவருக்கு ஒப்பந்தத்தை வழங்க யார் முடியு செய்தார் என்று கேள்விகளை முன்வைத்தார்.
இதற்கு மக்களவையில் விளக்கமளித்த நிர்மலா சீதாராமன், “எதிர்க்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் என்னுடைய பதிலை கேட்பதற்கு தயாராக இல்லாதது கவலையாக உள்ளது. நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் காங்கிரஸ் அக்கறை கொள்ளவில்லை. சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகள் ராணுவ போர்த் தளவாடங்களை அதிகரித்து வந்தது. அதுபோன்று நாமும் ராணுவத்தை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். வாஜ்பாய் பிரதமராக இருந்த போது ராணுவ பாதுகாப்பிற்காக நிறைய ஒப்பந்தங்கள் போடப்பட்டது. ஆனால் அதன்பின் காங்கிரஸ் ஆட்சியில் அப்படி எந்த விதமான ஒப்பந்தமும் செய்யப்படவில்லை.
ரஃபேல் ஒப்பந்தம் நாட்டின் பாதுகாப்புக்காக மட்டுமே போடப்பட்டது. முதல் ரஃபேல் போர் விமானம் இவ்வாண்டு இந்தியாவுக்கு வந்துவிடும். அதன்படி 2022க்குள் 36 விமானங்களும் இந்தியாவுக்கு வந்துவிடும். பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் பாதுகாப்பில் ஒப்பந்தம் என்பதற்கு வித்தியாசம் உள்ளது. நாங்கள் பாதுகாப்பு ஒப்பந்தம் மட்டுமே மேற்கொண்டுள்ளோம்” என்று பதிலளித்தார்.
மேலும் ஆவேசமாகப் பேசிய நிர்மலா சீதாராமன், “பிரதமரை திருடன் என்று கூறுவதற்கு யாருக்கும் உரிமையில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு அன்று பிரதமரை விமர்சித்துப் பேசினார்கள். நான் அவரை தற்காத்துக்கொள்ள வாதிட்டேன். ஆனால் சபாநாயகரான நீங்கள் என்னை அமரும்படி தெரிவித்தீர்கள், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்ததால் அது கவனிக்கப்படவில்லை. காங்கிரஸ் உறுப்பினர்கள் அமைதி காக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமரை திருடன் என்று கூறியபோது எங்களை பேசவிட்டீர்களா?” என்று சபாநாயகரிடம் கடுமையாக கேள்வி எழுப்பிய நிர்மலா சீதாராமன்,
நீங்கள் பிரதமரை கட்டிப்பிடித்த பிறகு, கண் அடித்ததற்காக மன்னிப்பு கேட்டீர்களா ? நாடாளுமன்றத்தில் இப்படியா நடந்துகொள்வது என்றும் ராகுல் காந்தியை விமர்சித்தார்.
விவாதத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “அவையில் நாங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினோம். ஆனால் ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்கவில்லை. 2 மணி நேரம் வரை பேசிய நிர்மலா சீதாராமன் தன்னுடைய பேச்சில் எந்த இடத்திலும் அனில் அம்பானியைக் குறிப்பிடவில்லை. பிரதமர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்ட போதா விமானப்படை ஆட்சேபம் தெரிவித்தது. இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல் நிர்மலா சீதாராமன் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்” என்றார்.
மேலும், நாங்கள் கேட்டுள்ள கேள்விகளுக்குப் பிரதமர் சார்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று நாங்களும் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுக்கும் கேட்கிறோம். இந்த விஷயத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் பிரதமர், அவையில் பேசாமல் அறையில் இருக்கிறார், மக்களவைக்குள் வர மறுக்கிறார்.ஆதலால், நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எங்களைக் கிண்டல் செய்து, துன்புறுத்துவதற்குப் பதிலாக ஜேட்லி பதில் அளிக்க வேண்டும். மக்களவை தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து கிரிமினல் விசாரணை செய்யப்படும்” என்றும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.