சென்னை: புத்தகக் கண்காட்சி தொடக்கம்!

இன்று சென்னையில் 42ஆவது புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 820 அரங்குகள் கொண்ட இந்த புத்தகக் கண்காட்சியில், அரங்கு எண் 271இல் மின்னம்பலம் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.


தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 42ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி, இன்று (ஜனவரி 4) சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கப்பட்டது. 820 அரங்குகள், சுமார் 1.5 கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் கூடிய இந்த கண்காட்சி, ஜனவரி 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இன்று மாலை புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாடு அறிவு சார் மாநிலம் என்பதை இங்குள்ள நூல்கள் பறை சாற்றுவதாகத் தெரிவித்தார். நூல்கள் வாசிக்கும் பழக்கத்தைப் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் கற்றுத் தர வேண்டுமென்றும், இந்த ஆண்டு 17 நாட்கள் புத்தகக் கண்காட்சி நடைபெறுவது வரப்பிரசாதம் என்றும் எடப்பாடி பழனிசாமி தன் பேச்சில் குறிப்பிட்டார்.

வார நாட்களில் தினமும் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். நுழைவுக்கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படும். இந்த ஆண்டு முதல் ஆன்லைனிலும் நுழைவுச்சீட்டைப் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து நாட்களும் புத்தகக் கண்காட்சியை பார்வையிட 100 ரூபாய் கொண்ட நுழைவுச்சீட்டைப் பயன்படுத்தலாம்.

புத்தகக் கண்காட்சியில் 271ஆவது அரங்கில் மின்னம்பலம் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. சமூகம், பொருளாதாரம், அரசியல், சுற்றுச்சூழலியல், மனநலம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த புத்தகங்கள் அரங்கில் வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சி வளாகத்தில் செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, இலவச வைஃபை வசதி, ஏடிஎம், உணவகம், மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் கலை நிகழ்ச்சிகள், பேச்சரங்குகள், குறும்படம் மற்றும் ஆவணப் படத் திரையிடல் போன்றவையும் புத்தகக் கண்காட்சியில் நடைபெறவுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.