கஜா: படகுகளுக்கான நிவாரணத் தொகை உயர்வு!

கஜா புயலினால் சேதமடைந்த பைபர் படகுகளுக்கான நிவாரணத் தொகை 85,000 ரூபாயில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


சட்டப்பேரவையில் இன்று (ஜனவரி 4) கஜா புயல் பாதிப்பு குறித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், கஜா புயல் பாதித்துள்ள விவசாயிகள் வங்கிகளில் வாங்கியிருக்கும் விவசாயக் கடன்கள், கல்விக் கடன், சுய உதவிக்கடன் ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தார். பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்துப் பேசினர்.

இதையடுத்து, புயல் பாதிப்பு குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். “கஜா புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு கொடுத்த உடனே தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கஜா புயலினால் உயிரிழந்த 52 பேரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. சேதமடைந்த பைபர் படகுகளுக்கான நிவாரணத் தொகை 85,000 ரூபாயில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தி வழங்கப்படும்.

சேதமடைந்த மின்கம்பங்களுக்குச் சில இடங்களில் மின் இணைப்பு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. விவசாயிகள் மறு வாழ்வுக்கு வாழ்வாதாரச் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. கஜா மறுவாழ்வு புனரமைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டு, அதற்கென்று தனியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சேதமடைந்த வீடுகளுக்கு மாற்று இடத்தில் வீடுகள் கட்டித் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலாண்டில் ஒரு லட்சம் வீடுகளும், அடுத்தடுத்த ஆண்டுகளில் தலா 50,000 வீடுகளும் கட்டித் தரப்படும். மொத்தமாக 5 ஆண்டுகளுக்குள் 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

விவசாயிகளுக்குத் தேவையான நிவாரண உதவியை வழங்க அரசு முழுமையாக நடவடிக்கை எடுக்கும் என்றும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கணக்கீட்டின்படி உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தனது பதிலில் குறிப்பிட்டார்.

“கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் எண்ணிப் பார்க்க இயலாத அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. புயலுக்கு 52 பேர் உயிரிழந்துள்ளனர். 5,57,492 வீடுகள் சேதமடைந்தன. 2,21,485 கால்நடைகளும் பறவைகளும் உயிரிழந்துள்ளன” என்றும் முதல்வர் தனது உரையில் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.