7 பேரை விடுவிக்கக் கூடாது-ராஜிவ் காந்தி குடும்பம்!

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் 7 பேரை விடுவிக்கக் கூடாது என்று கூறி, ராஜிவ் காந்தி உடன் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.


1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதியன்று ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். அப்போது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி அந்த கூட்டத்தில் பங்கேற்ற 14 பேர் பலியாகினர். ராஜிவ் காந்தி கொலை குறித்து சிபிஐ மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் பூந்தமல்லி தடா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 26 பேருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதித்தும் ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயகுமார் ஆகிய 3 பேர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டது. மற்ற 19 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குற்றவாளிகளின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இந்த வழக்கில் தண்டனை பெற்று 27 ஆண்டுகளாகச் சிறையில் இருப்பதாகத் தண்டனை அனுபவித்துவரும் 7 பேரின் சார்பாகக் குரலெழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சில ஆண்டுகளாக இவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது. எழுவர் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த செப்டம்பர் 6ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கியது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு. ஏழு பேரையும் விடுவிப்பது குறித்து அரசியல் சாசனப் பிரிவு 161இன் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமென்று உத்தரவிட்டது. அதன்பின், இதுவரை எழுவர் விடுதலை குறித்து மத்திய, மாநில அரசுகள் எந்த கருத்தையும் தெரிவிக்காத நிலையே தொடர்கிறது.

ஆளுநர் இது குறித்து முடிவு ஏதும் அறிவிக்காத நிலையில், ராஜிவ் காந்தி படுகொலையின் போது அவருடன் பலியான 14 பேர் குடும்பத்தினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்துவரும் கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்யக் கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (ஜனவரி 4) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் பிழைகள் இருப்பதாகத் தெரிய வந்தது. இதனால் இந்த வழக்கு விசாரணையை இரண்டு வார காலத்துக்கு ஒத்திவைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo
Powered by Blogger.