வவுனியா நகரசபை தகவல் வழங்க மறுப்பு – ஊடகவியலாளர் விசனம்

வவுனியா நகரசபையில் புதிதாக அமைக்கப்பட்ட அறை தொடர்பாக வவுனியா ஊடகவியலாளரொருவர் தகவலறியும் உரிமைச்சட்டத்தினூடாக கோரிய விபரத்திற்கு தகவல் வழங்க நகரசபை செயலாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.


இந்த செயற்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்த குறித்த ஊடகவியலாளர், இவ்விடயம் தொடர்பாக மேன்முறையீடு செய்வதற்கான நடவடிக்கையினையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையின் தலைவரது அலுவலகத்துடன் இணைத்து புதிதாக அமைக்கப்பட்ட அறையின் செலவு விபரம், விலைமனு கோரல் விபரம், குறித்த அறையினை அமைப்பதற்கான காரணம், அதனை பயன்படுத்தும் நபர்களது விபரம், அவர்களது பதவி நிலைகள் தொடர்பில் தகவலறியும் உரிமைச்சட்டத்தினூடாக, வவுனியா ஊடகவியலாளரொருவர் கடந்த 5 ஆம் திகதி தகவல் கோரியுள்ளார்.

நகரசபையின் செயலாளர் குறித்த தகவல் கோரிக்கை தொடர்பாக கடந்த 24.12.2018 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தில் கையொப்பமிட்டு, ‘தங்களால் கோரப்பட்ட தகவல்கள் தங்களது விண்ணப்பத்தின் பிரிவு 6 இல் குறிப்பிட்ட வகுதிக்குள் எவ்வகுதிக்குரியது என்பதனை இனங்காண முடியவில்லை. எனவே தகவல்களை வழங்க முடியாதுள்ளது’ என குறித்த ஊடகவியலாளருக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நகரசபை செயலாளரின் இத்தகைய செயற்பாட்டிற்கு குறித்த  ஊடகவியலாளர் விசனம் வெளியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.