குறுந்திரைப்பட திரைக்கதைப் போட்டி!

கவிஞர் கி.பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசுத்திட்டத்தின் நான்காவது ஆண்டுப் போட்டி.


காக்கைச் சிறகினிலே குழுமம் முன்னெடுக்கும் குறுந்திரைப்பட திரைக்கதைப் போட்டி.

ஈழத்தமிழர் சூழலில் (தாயகத்திலும் புலத்திலும்) கடந்த சில காலங்களாக எக்கச்சக்கமான குறுந்திரைப்பட விழாக்கள், போடடிகள், விருதுகள் புற்றீசல் போல் பரபரத்துக் கொண்டிருந்தன. அந்தப் பரபரப்பு இப்போது கொஞ்சம் தணியத் தொடங்கியுள்ளது. சில விழாக்களும் விருதுகளும் ஓரமாக ஒதுங்கிவிட்டன. சில இன்னமும் இழுத்துக் கொண்டிருக்கின்றன – தொடங்கினதை விடக் கூடாதென்றோ அல்லது ஈழம் சினிமா எப்பதோ ஒருநாள் உருப்படும் என்ற நம்பிக்கையிலோ!

தற்போது பரபப்பாக தெரிவு நடந்து கொண்டிருக்கும் குறுந்திரைப்பட விழாவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட படங்களைப் பார்த்த நண்பர், திரைப்பட ஆர்வலர் ஒருவர் சொன்னார், 'ஒரு படம் கூட உருப்படியில்லை' என்று.

ஆம், எம்மவர்களின் திரைப்பட விழாக்கள் வர வர சோபை இழந்து கொண்டு செல்கின்றன.

அதற்குக் காரணம் தரமான படங்கள் போதியளவு சமர்ப்பிக்கப்படாமை ஆகும்.

அதற்குக் காரணம் தரமான படங்கள் தயாரிக்கப்படாமை ஆகும்.

சரியான படங்கள் தயாரிக்கப்படாமைக்கான காரணம் என்னவென்று போய்ப் பார்த்தால்...

யாரிடமும் தரமான 'திரைக்கதை' இல்லை!

ஈழம் சினிமாப் படைப்பாளிகள் எல்லா விடயங்களையும் சரி பண்ணி சரி பண்ணிப் பார்க்கிறார்கள்.

Cannon DSLR இலிருந்து Arri Alexa வரை கேமராவை மாற்றி மாற்றிப் பார்த்துவிட்டார்கள். பிசி ஸ்ரீராம், ராஜீவ் மேனன் சந்தோஷ் சிவன் போன்றவர்களிடம் இல்லாத லென்ஸ் எல்லாம் வாங்கி படம் பிடிச்சாச்சு. இமயமலை உச்சியில் நின்று இசையும் கொம்போஸ் பண்ணியாச்சு. நடிப்பிலை மார்லன் பிராண்டோவை மிஞ்சியாச்சு. வசனத்திலே மணிரத்தினத்தை வென்றாச்சு. ஆனாலும் ஒரு கட்டத்துக்கு மேலை நகர்வதாக இல்லை.

என்ன காரணம்?

காரணம் வலு சிம்பிள்...,

நாம் திரைக்கதையை விட்டிட்டு மற்ற எல்லாத்தையும் சரி பண்ணிக் கொண்டிருக்கிறோம்!

திரைப்பட விழாக்கள் நடாத்துபவர்கள், விருதுகள் வழங்குவோர் சிலரிடம் நானும் சொல்லிப் பாத்திட்டன். திரைக்கதையில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்துதற்கான ஒரு பொறிமுறையை நீங்கள் நடைமுறைப்படுத்தாவிட்டால் உங்கள் திரைப்பட விழாக்கள் எல்லாம் படுத்திடும் என்று. ஆனால் ஆரும் கேட்பதாக இல்லை.

ஏனெனில் 'படம் காட்டுதல்' என்பதே அவர்களுக்கு முக்கியமானது. திரைக்கதையை ஊக்கிவிப்பதால் பெரிசா படம் காட்ட முடியாது என்பது அவர்களின் எண்ணமாக இருக்கலாம். ஆனால் தரமான திரைக்கதைகளை எழுத வைப்பதற்கான பொறிமுறை ஒன்று இல்லையேல் இந்தப் படம் காட்டுதல் கன நாளைக்கு ஓடாது என்பதே யதார்த்தம்.

'ஏதோ உள்ளதுக்குள்ளை பரவாயில்லை' என்ற அடிப்படையிலேயே இங்கு பல விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் விருதுகளை வாங்குவோர் அதை அப்படி எடுப்பதில்லை. 'நாம் சாதித்து விட்டோம்' என்ற அடிப்படையிலேயே விருதுகளோடு படம் பிடித்து ப்ரபைல் படம் போடுகிறார்கள். இது உண்மையில் விருது வாங்கும் படைப்பாளிகளின் வளர்ச்சியை – பப்பாவில் ஏத்தி தடுத்து நிறுத்தும் தந்திரமாகவே நான் பார்க்கிறேன். இதற்குப் பின்னால் ஈழம் சினிமாவின் வளர்ச்சியை விரும்பாத சக்திகளின் செல்வாக்கு இருக்குமோ என்ற ஐயமும் எனக்குண்டு.

இந் நிலையில்,

கவிஞர் கி.பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசுத்திட்டத்தின் நான்காவது ஆண்டுப் போட்டி....

காக்கைச் சிறகினிலே குழுமம் முன்னெடுக்கும்

குறுந்திரைப்பட திரைக்கதைப் போட்டி

மிகவும் முக்கியமானதும் கவனிக்கப்பட வேண்டியதும் என நான் நினைக்கிறேன்.

இணைக்கப்பட்டுள்ள படத்தில் விபரங்களை வாசித்தறியுங்கள்.

தொடர்புகளுக்கு: kaakkaicirakinile@gmail.com
Mukunthan Kandiah Mukilan

திரைக்கதைகளைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசித் தேதி ஜனவரி 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.