தையல் தொழிலாளிகளை அழிக்கும் பாடசாலைச் சமூகங்கள்.!

இற்றைக்கு ஒரு தசாப்தத்திற்கு முன்னர் தையல்கடை ஒன்றுக்கு ஜீன்ஸ் தைக்கவோ, சேட் தைக்கவோ எனச் சென்று வரிசையில் அளவு கொடுத்து
விட்டு வரிசையில் எடுக்க நின்றிருப்போம்.
அதன் பின் எல்லாமே மாறிப் போய் எல்லா ஆடைகளும் நேரடியாக விரும்பிய அளவில் கிடைத்தததை அடுத்து அத்தனை கடைகளும் கணிசமான அளவில் வெறிச்சோடிப் போனது. அதன் பின் சரம் மூட்டுவதும் பெண்களின் பிளவுஸ் தைப்பதும் மட்டுமே நிரந்தரமாகிப் போக இளைய தலைமுறையின் சரம் கட்டும் பழக்கத்தையும் நாகரீகம் கணிசமான அளவில் விழுங்கிக் கொண்டது. ரக்சூட், பொட்டம் என போட வசதியாக்கிக் கொண்டாலும் வீட்டில் குளியலறைகள் முளைத்ததையடுத்து ஜட்டியுடன் குளிக்கலாம் அல்லது இல்லாமலே குளிக்கலாம் என்ற நிலை வரும் போது சரங்களுக்கான தேவைகளும் குறைந்து போனது.
அதே போல பெண்களுக்கும் உள்ளாடையின் அளவுக்கேற்ப பிளவுஸ்கள் நேரடியாக உற்பத்தியானதையடுத்து தையல்கடைக்காரருக்கு அதுவும் குறைந்து போனது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக குறிப்பிட்ட அளவில் தையல் வேலைகள் நடந்து கொண்டிருந்தாலும் தையல் தொழிலாளி அத்தொழிலை கைவிடாமல் இருக்க ஏதுவாக அமைந்தது என்றால் இந்தப் பாடசாலைச் சீருடைகள் தான். எந்தத் தொழிலுக்கும் வருமானம் வருவதற்கென்று ஒரு காலப்பகுதி கட்டாயம் இருக்கும் அதைப் போலத் தான் தையல் தொழிலுக்கும் அடுத்த கல்வியாண்டு ஆரம்பம் என்பது பாடசாலைச் சீருடைக்கான காலம் என்பதால் அவர்களது நகை அடைவு எடுப்பதில் இருந்து கடன் அடைப்பது வரை இக்காலப்பகுதியில் தான் திட்டம் இட்டிருப்பார்கள்.

இந்நிலையில் பாடசாலைச் சீருடைத்துணிகள் நிறுத்தப்பட்டு பவுச்சர்களாக வழங்கும் திட்டம் உருவானதையடுத்து மாணவர்கள் கடைகளில் அதைக் கொடுத்து துணியாக வாங்கி தைத்துக் கொண்டார்கள். அதுவும் ஆரம்ப காலத்தில் வலயக்கல்வி அலுவலகங்கள் குறிப்பிட்ட கடைகளையே அங்கீகரித்ததால் மற்றைய கடைக்காரர்களது வேண்டுகோளுக்கிணங்க வலயக்கல்வி அலுவலகங்கள் தம் சட்டத்தை தளர்த்தி யாரும் விக்கலாம் என்ற அனுமதியைக் கொடுத்தது.

தற்போதுள்ள நிலையில் எம் பிரதேசங்களில் உருவாக்கப்ட்டுள்ள மொத்தமாக தைத்து கொடுக்கும் நிறுவனங்கள் நேரடியாக பாடசாலைகளுடன் தொடர்பு கொண்டு பாடசாலைக்கு ஒரு தொகை பங்களிப்பதன் மூலம் அத்தனை மாணவர்களும் தங்களிடமே தைக்க வேண்டும் என்ற சட்டத்தை பாடசாலைகள் மூலம் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
உண்மையில் எமது உள்நாட்டு உற்பத்திக்கு அப்படியான நிறுவனங்கள் தேவையானது என்பது அசைக்கமுடியாத உண்மையாக இருக்கையில் அவர்களுக்கு வெளிநாட்டுக்கு ஏற்றமதி செய்யக்கூடிய ஆடைகளின் உற்பத்தி தாராளமாக இருக்கின்ற போது ஏன் உள் ஊர் தொழிலாளிகளின் வயிற்றில் அடிக்கிறார்கள் என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடிவதில்லை.
இதை விட பாடசாலையின் சின்னத்தை சீருடையில் நிரந்தரமாகப் பதிப்பிக்கிறோம் என்ற இலவச விளம்பரத்தையே கவர்தலுக்குப் பயன்படுத்தினாலும். பல பாடசாலை மாணவர்கள் அந்தச் சீருடையை 2 வருடங்களுக்கு மேல் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களே. 3 வருடமாகப் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். காரணம் வெள்ளை ஆடைகளை நீலம் போட்டுப் பயன்படுத்தும் உக்தியால் தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் இவ்வர்ணச்சின்னம் ஒரு வருடத்தில் தொடர்ச்சியாகத் தோய்க்கும் போது மங்கி விட்டால் அடுத்த வருடமும் கட்டாயம் தைத்தே ஆக வேண்டிய கட்டாயத்தக்கு பல பெற்றோர்கள் தள்ளப்பட்டு விடுகிறார்கள்.
எல்லாவற்றையும் விட கடந்த வருடத்தில் சீருடை வைத்திருந்த எந்தப் பிள்ளையும் அதை தூக்கி எறிந்து விட்டு புதிதாகவே தைத்துக் கொள்ள வேண்டும் காரணம் அந்நிறுவனங்கள் பழைய ஆடைகளுக்கு சின்னம் பொறித்துக் கொடுக்கத் தயாராக இல்லை.

இந்த தையல் தொழிலாளிகள் தமது கடைகளை மூட தாமே தான் காரணமாக இருக்கப் போகிறார்கள். காரணம் இவர்களிடம் சரியான சங்கம் என்று ஒன்றும் இல்லை இருந்த சங்கத்திற்கும் வருட வருடம் ஒரு சிறிய தொகை கட்ட வேண்டும் என்பதால் அதை கைவிட்டு விட்டார்கள். வியாபாரத் தந்திரம் என்பது எவ்வளவு தூர நோக்கானது என்பதற்கு இச்சம்பவமும் பெரிய உதாரணமாகும். அப்படி ஒரு சங்கம் இருக்குமாக இருந்தால் ஒரு பெரும் தொகை துணியை மொத்தமாக மலிவாக வாங்கி விட்டு இவர்கள் பிரித்து எமுத்தாலே பெரும் தொகை இலாபம் இருக்கும். இதை under cut செய்வது என்பார்கள். இது பற்றி முன்னரும் ஒரு கட்டுரையை எனது வலைத்தளத்தில் எழுதியிருந்தேன். இதைத் தான் மொத்தமாகத் தைக்கும் நிறுவனங்கள் செய்கின்றன.

அடுத்தடுத்த வருடங்களில் ஒட்டு மொத்தப் பாடசாலைகளும் தமக்கு நிறுவனங்களால் கிடைக்கும் தரகுப் பணத்தால் நிறுவனங்களுக்கு தையலுக்குச் செல்லப் போவதை எந்தவொரு தையலாளியாலும் இதே நிலையில் இருந்தால் தடுக்கமுடியாது.
தையல் தொழிலாளரே ஒரு தடவை கைகோர்த்து சிந்தியுங்கள்.

- ம.தி.சுதா

photo credit - இணையம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.