இன ஒற்றுமையை சீரழிக்கும் ஆசிரியர்களை வெளியேற்றுமாறு கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்


தமிழர்களை இஸ்லாமியர்களாக மாற்றுவதைத் தடுத்து தமிழ் முஸ்லிம் மக்களின் இன ஒற்றுமையை சீர்குலைக்கும் ஆசிரியர்களை வெளியேற்றுமாறு கோரி
களுவன்கேணியில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலய அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மட்டக்களப்பு களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி பயின்ற மாணவியொருவர், அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் அறிவுரைக்கமைய, இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றிச் சென்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குறித்த ஆசிரியர்களை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது, ‘வேண்டாம் வேண்டாம் மதம் மாற்றும் முஸ்லிம் ஆசிரியர்கள் வேண்டாம்’, ‘விழித்துக்கொள் தமிழா முஸ்லிம்களின் மதமாற்றத்துக்கு எதிராக’, ‘முஸ்லிம் சமூகமே உனது மதத்தை எம்மீது திணிக்காதே’, ‘எமது பகுதியில் முஸ்லிம் இன மாற்றத்தை நிறுத்து’, ‘இன நல்லுறவை சீர்குலைக்கும் முஸ்லிம் இன மாற்றத்தை நிறுத்து’ போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவினை கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவியிடம் கையளித்தனர். கோரிக்கையைப் பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில், “குறித்த விடயம் தொடர்பாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்து சம்பந்தப்பட்டதாக கூறப்படும் ஆசிரியர்களிடம் முதற்கட்ட விசாரணை நடத்தியுள்ளோம். மாணவியின் பெற்றோருடனும் கலந்துரையாடியுள்ளோம். விபரங்கள் அனைத்தும் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரின் உத்தரவுக்கமைய நடவடிக்கையெடுக்கவுள்ளோம்“ என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.