வவுனியாவில் பாதுகாப்பு ரயில் கடவை திறந்துவைப்பு


வவுனியா விளக்குவைத்தகுளத்தில் பாதுகாப்பற்ற நிலையிலிருந்த ரயில் கடவை பாதுகாப்பான முறையில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த ரயில் கடவை தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் கோகிலகுமார் அஞ்சலா தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்துவைக்கப்பட்டுள்ளது. வவுனியா இறம்பைக்குளம் ஈசி மிசன் ஆலயத்தின் பிரதான ஆயர் வி.என்.இராஜசிங்கத்தின் நிதி பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட பாதுகாப்பு ரயில் கடவையை, புளியங்குளம் பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.பொன்சேகா மற்றும் ஓமந்தை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சுரேஸ் டி சில்வா ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டு திறந்துவைத்தனர். விளக்குவைத்தகுளத்தில் பாதுகாப்பு ரயில் கடவையை திறந்துவைத்தபின் கருத்து தெரிவித்த தெற்கு பிரதேசசபை உறுப்பினர் கோகிலகுமார் அஞ்சலா, எமது கிராமத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் கடந்த ஆண்டு எட்டு உயிர்களை காவு கொடுத்துள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களில் ரயில் பாதுகாப்பு கடவைகளை நிர்மாணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்ட போதிலும், எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என குற்றஞ்சாட்டினார்.
Powered by Blogger.