மட்டக்களப்பில் ஸ்டூடியோவுக்குள் நுழைந்த பௌத்த மதகுருவால் பரபரப்பு


மட்டக்களப்பில் அமைந்துள்ள ஒளிப்பட ஸ்டூடியோ ஒன்றிற்குள் நுழைந்த காவியுடை தரித்த பௌத்த மதகுரு ஒருவர், கடையில் தொழில் புரியும் ஊழியர்களை அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது ஸ்டூடியோவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த குழந்தை ஒன்றின் ஒளிப்படத்தை காட்டி இது யாருடையது, இது எனது சிறிய வயது புகைப்படம், இதை ஏன் நீங்கள் காட்சிப்படுத்த வேண்டும், இதற்கு விலை 125 ரூபாயா என பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.


 அத்தோடு மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடவுள்ளதாக தெரிவித்து கடையில் தொழில் புரியும் ஊழியர்களை அச்சுறுத்தியதுடன், குறித்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். காவியுடை தரித்து வந்தவர் உண்மையில் பௌத்த மதகுரு போன்று நடந்துகொள்ளவில்லை என ஸ்டூடியோவில் தொழில் புரியும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
 இந்நிலையில் வீதியில் நின்றவர்கள் பௌத்த மதகுருவை மறித்து நீங்கள் எங்கிருந்து வந்துள்ளீர்கள் என வினவியுள்ளனர். அதற்கு, மட்டக்களப்பைச் சுற்றிப்பார்க்க வந்ததாக குறிப்பிட்ட குறித்த பௌத்த மதகுரு, அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளார். இவ்விடயம் குறித்து 119 என்ற  பொலிஸ் அவசர  பிரிவுக்கு கடை ஊழியர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். தகவலறிந்து அவ்விடத்திற்கு பொலிஸார் வருவதற்கு முன்னர் பௌத்த மதகுரு மட்டக்களப்பு புகையிரதப் பகுதியை நோக்கிச் சென்றதாக கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.