கஞ்சா கடத்திய குற்றவாளிகளை காப்பாற்றுகின்றது கூட்டமைப்பு


பொலிஸாரின் சட்ட ஒழுங்கு
நடவடிக்கைகளில் அரசியல்வாதிகள்  அநாவசியமாக தலையீடு செய்து, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை குறிப்பாக, கஞ்சாக் கடத்தல் காரர்களை, விடுவித்தமை தொடர்பாக சபையின் அவதானத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.



 நாடாளுமன்றில் இன்று 1996 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில் –


 “வடமராட்சி கிழக்கு மாமுனை கிராமத்தை சேர்ந்த கந்தசாமி கோகுலதீபன் என்பவர் கேரளா கஞ்சா கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர் என அப்பகுதியில் குறிப்பிடப்பட்டு நிலையில், இவர் உள்ளிட்ட ஐவர் கேரளக் கஞ்சாவினை பொதி செய்துகொண்டிருந்த வேளையில்,



கிளிநொச்சி பொலிஸார் கடந்த டிசம்பர் 3ஆம் திகதி அன்று இவர்களை கைது செய்ய முற்பட்ட வேளையில் அவர்கள் பொல்லுகளைக் கொண்டு பொலிசாரை தாக்கியுள்ளனர் என்றும், ஆனால் பொலிசாரின் துணிச்சலான செயற்பாட்டினால் அவர்கள் சுற்றிவளைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர் என்றும், அவர்களை விசாரணை செய்து அவர்களுக்குரிய குற்றப்பத்திர அறிக்கைகள் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் ஜனநாயகத்தை பாதுகாக்கவென உச்ச நீதிமன்றில் வாதாடிய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொலிஸ் உயரதிகாரியை தொடர்புகொண்டு அழுத்தம் கொடுத்ததன் விளைவாக கோகுலதீபன் என்ற அந்நபர் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் விடுவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஏனைய நால்வரும் கோகுலதீபனை விடுதலை செய்ய முடியுமாயின் ஏன் தங்களை விடுதலை செய்ய முடியாது?



என நியாயம் கேட்டதன் அடிப்படையில் பொலிசாரால் மறுநாள் அவர்களும் விடுவிக்கப்பட்டனர் என்றும் தெரிய வருகின்றது. ஜனநாயகத்தை பாதுகாக்கவென கூக்குரலிட்டவர்கள் சட்டம் ஒழுங்கை எவ்வாறு பாதுக்கின்றார்கள்? என்பது தொடர்பில் இச்சபையில் உள்ளவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். அத்துடன் அவ்வாறு அரசியல்வாதியின் அழுத்தத்திற்கு அடிபணிந்து வீரமுடன் செயற்பட்ட பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட அந்நபர்கள் விடுவிக்கப்படுவதற்கு பொறுப்பாக இருந்த உயரதிகாரி மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் அதிமேதகு ஜனாதிபதி அவர்களிடமும் பொலிஸ்மா அதிபர் அவர்களிடமும் இத்தருணத்தில் நான் கோரிக்கை விடுக்கின்றேன்“ என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.