சிறந்த நகரை உருவாக்க மட்டு.மாநகரசபையின் திட்டங்களை பின்பற்றுங்கள்


எதிர்காலத்தில் சிறந்த நகரமொன்றினை உருவாக்குவதற்கு மட்டு.மாநகரசபையின் திட்டங்களை பின்பற்ற வேண்டியது அவசியமென ஓஸ்லோ மாநகரின் பிரதி மேயர் கம்சாயினி குணரட்னம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்புக்கு இன்று (புதன்கிழமை) காலை கம்சாயினி குணரட்னம் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை மேயர், மாநகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் வரவேற்பளித்ததை தொடர்ந்து மாநகரசபை முதல்வருடன் சந்திப்பொன்றில் கம்சாயினி குணரட்னம் ஈடுபட்டார். பின்னர், தனது விஜயத்தினை குறிக்கும் வகையில் மட்டக்களப்பு மாநகரசபையில் மரக்கன்று ஒன்றினை நாட்டியதுடன் மாநகரசபையினையும் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், “மட்டக்களப்பு மாநகரசபையில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மிகவும் சிறந்த முறையில் காணப்படுகின்றன. மேலும், இயற்கையினை பாதுகாக்கும் விடயத்தில் அதிக அவதானம் செலுத்த வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் மட்டக்களப்பு மாநகரசபையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் பாராட்டத்தக்கவையாகும். ஆகையால் சிறந்த நகரமொன்றை உருவாக்க வேண்டுமென்றால், மட்டக்களப்பு மாநகரசபையினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் போன்று சிறந்த திட்டங்களை வகுக்கவேண்டும்” என ஓஸ்லோ மாநகரின் பிரதி மேயர் கம்சாயினி குணரட்னம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.