சிறையில் நளினி-முருகன் உண்ணாவிரதம் ஏன் தெரியுமா?

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் 28 ஆண்டுகளுக்குப் பின்னரும் ஏழு தமிழர்கள் விடுவிக்கப்படாத காரணத்தினால் வேறு வழியில்லாமல் நளினியும் முருகனும் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்க வேண்டிய நிலை உருவாகி விட்டதாக அற்புதம் அம்மாள் உருக்கத்துடன் குறிப்பிட்டார்.
ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு தமிழர்கள், கடந்த 28 ஆண்டுகளாகச் சிறைச்சாலையில் இருந்து வருகிறார்கள். அவர்களை விடுவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். இதுவரை 11 நகரங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் 12வது நகரமாக நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
இது தொடர்பாக அற்புதம் அம்மாள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``என் மகன் மட்டும் அல்லாமல் ஏழு தமிழர்கள் கடந்த 28 வருடங்களுக்கும் மேலாகச் சிறையில் வாடிவருகிறார்கள். அவர்களை விடுவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி நீதிமன்றத்தின் கதவைத் தட்டினோம். அதன்படி ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வது தொடர்பாகத் தமிழக அரசே முடிவு செய்யலாம் என அறிவித்தது. 
முன்னாள் முதல்வரான மறைந்த ஜெயலலிதா, என் மகனை என்னிடம் ஒப்படைப்பதாக அறிவித்திருந்தார். அதற்கேற்ற வகையில் உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டிருப்பதால், என் மகன் உள்ளிட்ட ஏழு தமிழர்களையும் விடுவிக்கத் தமிழக அரசு ஆளுநரை வலியுறுத்த வேண்டும். ஆளுநர் கடந்த 150 நாள்களுக்கும் மேலாக இந்த விவகாரத்தில் எந்த முடிவையும் அறிவிக்காமல் இருக்கிறார். அதனால் தான் விடுதலையை வலியுறுத்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறேன்.
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பும் ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது. இதற்காக உண்ணாவிரதம் இருக்க வேண்டும், ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என பல்வேறு போராட்ட வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறார்கள். ஏழு தமிழர்களின் விடுதலைக்காக சிறைக்குச் செல்லவும் தயார் என அறிவித்து இளைஞர்கள் பலர் தங்கள் பெயரை அறிவித்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஏழு பேரின் விடுதலையைத் தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநர் எந்த முடிவையும் அறிவிக்காமல் இருப்பதால் நான் மக்களைச் சந்திக்கிறேன். ஆனால், நளினியும் முருகனும் சிறைக்குள் இருக்கிறார்கள். அவர்களின் மகளைக் கூட சந்திக்க முடியவில்லை. அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக வேறு வழி தெரியாமல் பட்டினிப் போராட்டம் நடத்துகிறார்கள். வாழ்நாளின் பெரும்பகுதியை சிறையில் கழித்துவிட்ட நிலையில் அவர்களை விடுவிப்பது தொடர்பாக ஆளுநர் விரைவாக முடிவெடுக்க வேண்டும்.
நாட்டின் உயர்ந்த நீதிமன்றமான உச்ச நீதிமன்றமே உத்தரவிட்ட பின்னரும் முடிவெடுக்காமல் இருப்பது சரியல்ல. ஆளுநரே சட்டத்தை மதிக்காமல் இருந்தால் சாமானிய மக்கள் எப்படி மதிப்பார்கள்? அதனால் தவறான முன்னுதாரணத்தை ஆளுநர் ஏற்படுத்தக் கூடாது. இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாடும் திட்டம் எதுவும் எங்களிடம் கிடையாது. அளிக்கப்பட்ட தீர்ப்பை மதிக்க வேண்டும் என்பதையே நாங்கள் வலியுறுத்துகிறோம்’’ என்று தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo #perarivalan  #arputhammalrajiv #gandhi

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.