தமிழ்முழக்கம் சாகுல் கமீதுவின் சில அவசியமான கருத்துகளின் வரிவடிவம்.!!
நான் பர்மாவில் வாழ்ந்த தமிழ்க்குடும்பத்தில் பிறந்தவன், அங்கிருந்து விரட்டப்பட்டு தமிழகத்தில் குடியேறியவன். அலுமினியம்
இரும்புப்பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதியே எமது தொழில். நான் தமிழனாக இருந்து விரட்டப்பட்டதால் தலைவர் பிரபாகரன் பற்றி அறிந்து அவர்பால் ஈர்க்கப்பட்டேன்.தேசியத்தலைவர் கிளிநொச்சியில் நடாத்திய பத்திரிகையாளர் சந்திப்பிற்கு இரண்டு நாட்களிற்குப் பிறகு, புலிகள் மீதான தமிழகத்தின் மௌனத்தை உடைப்பதற்கான வேலையில் நானும் திரு. சுபவீரபாண்டியனும் இறங்கினோம். மண்டபம் ஒன்றை வாடகைக்குப்பெற்று தேசியத்தலைவரின் சந்திப்பைப் பற்றி மக்களுக்கு அறிவுறுத்தும் சந்திப்பை ஒழுங்குபடுத்தினோம். ஆனால் அரசு அதற்குத்தடைபோட்டது.
எனது அலுவலகத்தினுள் புகுந்து அச்சுறுத்தியது. பிரித்தானியாவிற்கு அனுப்பப்படவிருந்த நெடுமாறன் ஐயாவின் "தமிழீழம் சிவக்கிறது " என்ற நூல்கள் அடங்கியிருந்த பெட்டிகளை பார்த்துவிட்டு பழநெடுமாறனை முதற்குற்றவாளியாகவும் என்னை இரண்டாவது குற்றவாளியாகவும் பதிவுசெய்தது.
மண்டபத்திற்குத் தடைவிதித்த நிலையில் ஆனந் திரையரங்கை வாடகைக்குப் பெற்று ஒன்றுகூடலை நடாத்தினோம்.
சிறையில் எனது அறைக்கருகிலேயே நக்கீரன் கோபாலும் அடைக்கப்பட்டிருந்தார். நான் வசதியான குடும்பப்பின்னணி என்பதால் காவல்துறையினரிடம் எனக்கு பணிவாக நடந்துகொண்டார்கள்.
2009 இல் ஈழப்போர் நெருக்கடியான காலத்தில் நாம் திமுக வைப் பெரிதும் நம்பினோம். கனிமொழியுடன் பேசியபொழுது "நாங்கள் வெறும் மாநில அரசு, என்னதான் செய்யமுடியும்" என்று கையை விரித்தார். ஆனால் திமுக நினைத்திருத்தால் மத்திய அரசுக்கெதிராக தமிழ்நாட்டை கொந்தளிக்க வைத்திருக்க முடியும். பின்பு திரு,வை.கோபால்சாமியிடம் பேசினோம். அதற்கு அவர்; விடுதலைப்புலிகள் தற்போது (2009) ஏராளம் ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ளதாக எனக்கு செய்தி வந்திருக்கிறது. அவர்களது பின்வாங்குதல் எல்லாம் இராசதந்திரம், பொறுத்திருப்போம் என்றார். தமிழகத்தில் ஏதாவது போராட்டங்களைச் செய்யலாமே என்று கேட்டபொழுது அரசின் கோபத்தைச் சாதித்தால் பின்னர் எதுவும் செய்யமுடியாது என்று கூறிமுடித்துவிட்டார்.
இந்தநிலையில் என்னைப்பற்றிக் கேள்வியுற்ற சீமான் (அவரை நான் மருமகன் என்பேன்) என்னிடம் வந்து நாங்கள் ஒரு கட்சி ஆரம்பித்தால் என்ன என்று கேட்டார். இப்போது அங்கே போர் உச்சத்தின் இறுதியில் இருக்கிறதே , இனிநாங்கள் கட்சி ஆரம்பித்து எப்படிப் போராடுவது என்று விரக்தியின் விளிம்பில் நான் இருந்தேன். சரி மருமகன் கேட்கிறானே என்று விட்டு யாரை கட்சியின் ஒருங்கிணைப்பாளராகப் போடலாம் என்று கேட்டேன். கொளத்தூர் மணி அவர்களைத் தலைவராகவும், வேல்முருகனை செயலாளராகவும் போடலாம் என்பது சீமானின் சிந்தனையாக இருந்தது.
இருவரிடமும் பேசினோம். நான் திராவிட இயக்கத்தில் இருப்பதால் இதற்குள் வரமுடியாது, ஆனால் பின்புல உதவியைச் செய்கிறேன் என்றார் கொளத்தூர் மணி. வேல்முருகனும் பின்புலஉதவிகளைத் தருவதாகச் சொன்னார். எனக்கும் மருமகனுக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை. ஒரு கட்டத்தில் சீமான் ஒரு கலாந்தாய்வுக்கூட்டத்திற்கு அறிவிக்க, தன்னெழுச்சியாக தமிழ்த்தேசியப்பற்றுக் கொண்டவர்கள் நிறையப் பேர் வந்திருந்தார்கள்.

இந்த இளைஞர்களாவது தெளிவுடன் இருக்கிறார்களே என்ற நிலையில், இவர்களையாவது ஒருங்கிணைக்கவேண்டும் என்ற அவாவில் 2010 மே 18 இல் கட்சி அறிவிக்கப்பட்டது. கலந்தாய்வில் சீமான் தெரிவித்த முதல் விடயமே; "எங்களுக்குத் தலைவர் பிரபாகரன் மட்டுமே, அவரைப் பின்பற்றியே நாம் செயற்படுவோம்" என்ற முடிவைத் தெரிவித்தார், வந்திருந்தவர்களுக்கும் அது பிடித்துப்போயிற்று.
நான் ஒரு இசுலாமியனாக இருந்துகொண்டு பிரபாகரன் பின்னால் செல்வது சரியா என ; தொழில்நிமித்தம் நான் இலங்கைக்குச் சென்றிருந்தபோது( 2003) இலங்கை இசுலாமியர்கள் கேட்டார்கள். அவர்களுக்குத் தெளிவாக ஒன்றைச் சொல்லிவிட்டுவந்தேன். மதம் எப்போதும் மாறும், ஏனெனில் அது இடையில் வந்தது. ஆனால் எனது இனமும் அதன் தலைமையும் ஒருபோதும் மாறாது. அது எனது உரிமை என்றேன். அதன் பிறகு நண்பர்களாயிருந்த பலர் விரோதிகளாகிப்போனார்கள்.
2009 இல் நடைபெற்ற எனது மகளின் திருமணத்திற்கு வந்த சீமான் யாருடன் பேசவில்லை, அமைதியாக இருந்துவிட்டுப் போய்விட்டார், மிகுந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு ஒருவருடமாக அவர் யாருடனும் பேசாது இருந்த காலமும் உண்டு.
இப்போது நடைபெறுவது அரசியல் மற்றும் பண்பாட்டு மீட்சி. இழந்த எமது தமிழ்மண்ணை மீட்டெடுக்கும் பணியே தலையாய கடமை. சீமான் தன்னை முன்னிறுத்த முயற்சிக்கும் நபரில்லை. சாதி,மத வேறுபாடுகளை அடியோடு வெறுப்பவன். எங்களது காலத்தில் உடனடியாக வெற்றிபெற்று அனைத்தையும் நிலைநாட்டி அரசமைப்போம் என்று வெட்டிப்பேச்சு பேசுபவர்களல்ல நாம். நாம் எமது இனத்தை ஒரு மாற்றத்திற்காக அணியம் செய்கிறோம். அது மெல்ல மெல்ல ஆனால் நிச்சயமாக மீண்டெளும்.
RSS என்ற இந்துதத்துத்தைத் திணிப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் இன்று தலைவிரித்தாடுகிறது. அது வளர்ந்து இன்று அரசையே கைக்குள் கொண்டுவர 100 ஆண்டுகளாயிருக்கிறது. ஆனால் எமது இனத்தின் உரிமையை மீட்டெடுக்க, தலைவர் பிரபாகரனை முழுமுதற்தலைவனாக ஏற்று பெரும்பலத்துடன் அறமும் நீதியும் ஒருங்கு சேர நகர்கிறோம். இளைஞர்கள் உலகெங்கும் எமக்குப் பக்கபலமாயிருக்கிறார்கள். நாம் தொடர்ந்து போராடுவோம் .....!!!!
-தேவன்

.jpeg
)





கருத்துகள் இல்லை