கோடை வெயிலில் உடலைப் பாதுகாக்க!!!

மார்ச் மாத தொடக்கத்திலேயே வெயில் மண்டையைப் பிளக்கத் தொடங்கிவிட்டது.
வெயிலை சிலநேரங்களில் ரசித்தாலும் அது சுட்டெரிக்கும்போது அதிலிருந்து நம் உடலைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவேண்டியது அவசியம்.

இளவேனிற்காலம் தொடங்க இன்னும் பல நாள்களைக் கடக்கவேண்டியிருக்கிறது. ஆனால், இப்போதே... மார்ச் மாத தொடக்கத்திலேயே வெயில் மண்டையைப் பிளக்கத் தொடங்கிவிட்டது. வெயிலை சிலநேரங்களில் ரசித்தாலும் அது சுட்டெரிக்கும்போது அதிலிருந்து நம் உடலைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவேண்டியது அவசியம்.

டிஹைட்ரேஷன்

 கோடைக்காலத்தில் ஏற்படும் உடல் பிரச்னைகளில் மிக முக்கியமானது `டிஹைட்ரேஷன்' (Dehydration)எனப்படும் உடல் வறட்சி. மனித உடலுக்குத் தேவையான நீர் உடலில் இல்லாமல் போகும்போது ஏற்படக்கூடியதே `டிஹைட்ரேஷன்'. உதாரணமாக, நம் உடலிலிருந்து அரை லிட்டர் நீர் வெளியேறுகிறது என்றால், அதற்கு இணையாக நம் உடலில் நீர் வந்து சேரவேண்டும். சிறுநீரகம், சருமம் மற்றும் காற்றுப் பாதைகளின் வழியாக நீர் வெளியேறும்போது அதனுடன் உப்புச் சத்துகளும் சேர்ந்து வெளியேறுகின்றன.
கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இதுபோன்ற சூழலில் குழந்தைகளுக்கு `டிஹைட்ரேஷன்' ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ளது. அதேபோல, வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரத்தில் வயதானவர்களுக்கும் `டிஹைட்ரேஷன்' ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லும் பொதுநல மருத்துவர் அருணாச்சலம் அதுபற்றிய சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

`` * ஒருவருக்கு`டிஹைட்ரேஷன்' ஏற்பட்டிருக்கிறது என்பதை நாவறட்சி, சருமம் உலர்தல், சோர்வு, உடல் வலி, தலைவலி, மயக்கம், வாந்தி, கண்களில் ஏற்படும் எரிச்சல் போன்ற அறிகுறிகளின்மூலம் உறுதி செய்துகொள்ளலாம்.

நீர்

* சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது லேசான வலியுடன் வெளியேறும். அதை நீர்க்கடுப்பு (Dysuria) அல்லது நீர்ச்சுருக்கு என்போம். இதை டிஹைட்ரேஷனின் ஆரம்ப அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம்.

* காலையில் போகும் சிறுநீரைத்தவிர மற்றநேரத்தில் போகும் சிறுநீர் மஞ்சள்நிறத்தில் இருக்கக்கூடாது. அப்படியிருந்தால் `டிஹைட்ரேஷன்'  ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று பொருள்.

* கோடைக்காலத்தில் ஏற்படும் டிஹைட்ரேஷனிலிருந்து பாதுகாக்க இரண்டிலிருந்து மூன்று லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இரண்டு லிட்டர் தண்ணீர் என்பது எட்டு கிளாஸ் தண்ணீராகும்.

* டிஹைட்ரேஷன் ஏற்படுவதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்துக் குடிக்கலாம்.

டிஹைட்ரேஷனிலிருந்து காத்துக்கொள்ளும் இயற்கை வழிமுறைகள் பற்றிக் கூறினார் சித்த மருத்துவர்  தமிழ்க்கனி

`` டிஹைட்ரேஷன் ஏற்பட்டால் இயற்கையாகக் கிடைக்கும் பழச்சாறுகள், நீர்க்காய்கறிகள், மருதாணி, சந்தனம் போன்றவற்றைக் கொண்டு சரிசெய்து கொள்ளலாம்.

1. இளநீர்

இளநீரில் இயற்கையாக உடலுக்குத் தேவையான சோடியம், பொட்டாசியம் போன்ற உப்புச் சத்துகள்  இருக்கின்றன. டிஹைட்ரேஷன் ஏற்படும்போது கொடுக்கப்படும் `ஓ.ஆர்.எஸ்' (ORS) பவுடருக்கு இணையாக இளநீர் செயல்படுகிறது.

2. கரும்புச் சாறு மற்றும் எலுமிச்சைச் சாறு

கரும்புச் சாற்றில் குளூக்கோஸ், ஃப்ரக்டோஸ் போன்ற இனிப்புச் சத்துகளுடன் உப்புச் சத்தும் இருக்கிறது. ஆகவே, கரும்புச் சாற்றுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து குடிப்பது டிஹைட்ரேஷனிலிருந்து பாதுகாக்கும். எலுமிச்சை சாற்றுடன் தண்ணீர், தேன் சேர்த்தும் குடிக்கலாம்.


3. நன்னாரி

`நன்னாரி மணப்பாகு' என்ற பெயரில் மருந்துக் கடைகளில் கிடைக்கும் சிரப்பை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். நன்னாரி மணப்பாகில் சர்க்கரை மற்றும் சிரப்புகள் இருப்பதால் அப்படியே அருந்தலாம். நன்னாரி வேர் மற்றும் சீரகத்தைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்தும் குடிக்கலாம்.

4. தண்ணீர்

தண்ணீரைப் பொறுத்தவரை மண்பானை நீரைக் குடிப்பது நல்லது. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் வெட்டி வேர் அல்லது விலாமிச்சை வேரை மண்பானை நீருடன் போட்டு ஊற வைத்துக் குடித்தால் உடல் சூடு தணியும்.

5. ஆவாரம் பூ

ஆவாரம் பூவின் இதழ்களை வெதுவெதுப்பான பாலுடன் சேர்த்துக் குடிக்கலாம். ஆவாரம் பூவை அப்படியே கடித்துச் சாப்பிடுவதும் நல்லது. ஆவாரம் இலைகளை காயவைத்துப் பொடியாக்கி பால் அல்லது நீரில் கலந்தும் குடிக்கலாம்.

6. சந்தனம்

குளிப்பதற்குமுன் சந்தனத்தை உடலில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்துக் குளிக்கலாம். இது உடல் சூட்டைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைக்க உதவும்.

7. மருதாணி

மருதாணி இலைகளை பச்சையாக அரைத்து உள்ளங்கை, கால் பகுதியில் தேய்ப்பதால் உடல் சூடு குறையும்.


8. வெள்ளரி, நுங்கு, தர்பூசணி

கோடைக்காலத்தில் கிடைக்கும் வெள்ளரி, தர்பூசணி, நுங்கு போன்றவற்றைச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியடையும்.

9. மோர்

கோடைக்காலத்தில் தயிரைவிட மோர் அருந்துவது சிறந்தது. தயிர் செரிமானமாக தாமதமாகும் என்பதால், தயிரைக் கடைந்து மோராக்கி அதனுடன் நீர் சேர்த்துக் குடிப்பது உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும்.

10. நீர்க்காய்கறிகள்

நீர்க்காய்கறிகளான சுரைக்காய், பூசணிக்காய், பரங்கிக்காய், தக்காளி போன்றவற்றை கோடைக்காலத்தில் அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வது உடல் வறட்சியிலிருந்து பாதுகாக்கும்.

தண்ணீர்

11. பழச்சாறுகள்

பழங்கள் மற்றும் பழச்சாறுகளை கோடைக்காலத்தில் அதிகமாக எடுத்துக்கொள்வது சிறந்தது. உடல் சூட்டை அதிகமாக்கும் பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களை கோடைக்காலத்தில் அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்ப்பதுநல்லது.

12. நீராகாரம்

இரவில் சமைத்த சாதத்தில் நீர் ஊற்றி வைத்து மறுநாள் காலையில் அந்த நீரை அருந்தலாம். இது கோடைக்காலத்தில் உடலைக் குளிர்ச்சியாக வைக்க உதவும்.

நாம் உண்ணும் உணவே நம் உடலுக்கு மருந்தாகச் செயல்படும். இயற்கையாகக் கிடைக்கும் உணவுகளை உண்டும் அதிகமான நீரை அருந்தியும் கோடைக்காலத்தில் வெப்பத்தால் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்'' என்கிறார் தமிழ்க்கனி.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.