பொள்ளாச்சி வல்லுறவு... கோவை எஸ்.பி-யின் ‘பிளான்’ என்ன?

விஷயம் வெளியில் வந்து தங்களது பெயர் அடிபட்ட உடன், தங்களைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே அ.தி.மு.க-வினர் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
மேலும், இந்த வழக்கில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த நாகராஜ் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகியும், அப்போதே ஏன் அவரைக் கட்சியிலிருந்து நீக்கவில்லை?
தென்னைக்கும் கொங்குத் தமிழுக்கும் பெயர் பெற்ற பொள்ளாச்சி, தற்போது பெண்களின் பாலியல் வீடியோக்களால் பதறிக் கொண்டிருக்கிறது. பொள்ளாச்சி தொடர்பாக வெளிவரும் ஒவ்வொரு தகவலும் அங்குள்ள மக்களிடம் பெரும் ரணத்தை ஏற்படுத்தி வருகின்றன. வழக்கில் காவல்துறையினர் மீது மட்டுமன்றி, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் மீதும் பல சந்தேகங்கள் எழுகின்றன.

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பேசினோம், “இந்த நபர்கள் கைது செய்யப்படுவதற்கு 10 நாள்களுக்கு முன்பே, இந்த விஷயத்தை மையமாக வைத்து பொள்ளாச்சியில் பல்வேறு சம்பவங்கள் நடந்துவிட்டன. அந்தப் பெண்ணின் அண்ணன் தன் நண்பர்களுடன் நேரில் சென்றார். அதில் ஒருவர், திருநாவுக்கரசிடம் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். அதைத் திருப்பிக் கொடுப்பதாகச் சொல்லித்தான் திருநாவுக்கரசை வரவைத்தோம். அப்போது, அவர்களை அடித்துதான் வீடியோ வாங்கியிருக்கிறார்கள். இதன் பிறகு, கைகலப்பு ஆகிவிட்டது. அன்றைய தினமே விஷயம் காவல்நிலையத்துக்குச் சென்றுவிட்டது. அப்போதே, இந்த வீடியோவை வைத்து புகார் கொடுத்தும், ஆறு நாள்களுக்கு  புகாரை எடுக்கவில்லை. இந்த வழக்கு அவ்வளவுதான் என்று சோர்ந்துவிட்டோம்.

இந்த வழக்கை வைத்து போலீஸ் தரப்பிலும் சிலர் நன்கு காசு பார்த்துவிட்டனர். பிறகுதான், டி.எஸ்.பி-யிடம் புகார் கொடுத்தோம். அதைத்தொடர்ந்துதான் கைது நடவடிக்கை எல்லாம் சென்றது. திருநாவுக்கரசு முக்கிய குற்றவாளிதான். ஆனால், இந்த வழக்கில் தொடர்புள்ள பலரது பெயர்கள் வெளியில் வரவில்லை. மணிகண்டன் அந்த வீடியோவிலும் வருகிறார். அடிதடி வழக்கிலும் அவர் பெயர் உள்ளது. ஆனால், பெண் தொடர்பான வழக்கில் அவரது பெயர் இல்லை. கெரோன் மற்றும் ஜிம் வசந்த் ஆகிய இரண்டு பேருக்கும் இதில் முக்கிய தொடர்புள்ளது. மணிகண்டன் தலைமறைவாக இருக்கிறார்.

இந்த விஷயத்தை வெளிக்கொண்டு வந்த, பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என்று பலருக்கும் மிரட்டல்கள் வந்துள்ளன. அதனால்தான், இதைப்பற்றி வெளிப்படையாகப் பேச யாரும் முன்வருவதில்லை” என்றனர்.

தற்போது, ஆளுங்கட்சியினரின் அழுத்தம் காரணமாகத்தான், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பில்லை என்ற ஆடியோ வெளியாகியுள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால், அந்த ஆடியோவில் பேசுபவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடன் பிறந்த சகோதரர் இல்லை. அவரின் உறவினர் என்று கூறுகின்றனர்.  அந்தப் பெண்ணை வைத்தும் தங்கள் மீதான களங்கத்தைத் துடைக்க ஆளுங்கட்சியினர் முயற்சி செய்து வருகின்றனர். அதுதான் சில மணி நேரத்துக்கு முன்பு வாட்சாப் ஆடியோவாக வெளியானதாகவும் சொல்லப்படுகிறது.

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் இரண்டாவது மகன் பிரவீன் மற்றும் தி.மு.க–வின் கோவை புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மகன் மணிமாறன் ஆகிய இரண்டு பேருமே திருநாவுக்கரசுக்கு நண்பர்கள்தான் என்று கூறப்படுகிறது. இதில், பிரவீன் மீது ஏற்கெனவே ஒரு குற்றச்சாட்டு உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அவினாசி சாலையில் பிரவீன் கார் ஓட்டிச் சென்றபோது நடந்த விபத்தில் சுரேகா என்ற கல்லூரி மாணவி பலியானார். பிரவீன் உட்பட மேலும் சில மாணவிகள் காயமடைந்தனர். இதுதான், பொள்ளாச்சி ஜெயராமன் மகன் மீது சந்தேகங்கள் வலுக்க முக்கியக் காரணம். அது மட்டுமல்லாமல், இதில் சம்பந்தப்பட்ட நபர்களின் முகநூல் கணக்குகளில் சில புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன. சிலர், கைது செய்யப்பட்டுள்ள நபர்களைத் தங்களது நட்புப் பட்டியலில் இருந்து ‘அன்ஃபிரண்ட்’ செய்துள்ளனர்.

“பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தைரியமாகக் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சொன்னதே நான்தான்” என்று பொள்ளாச்சி ஜெயராமன் சொல்கிறார். எம்.பி மகேந்திரன் மூலம் போலீஸ் எஸ்.பி-யைச் சந்தித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னதையும் பெருமையாகப் பேசிக்கொண்டிருக்கின்றனர். பொள்ளாச்சி ஜெயராமன் துணை சபாநாயகராக இருக்கிறார். மகேந்திரன் பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். இருவரும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள். எதிர்க்கட்சிகளைப்போல, மனுக்கொடுத்தோம், போராட்டம் நடத்தினோம் என்று ஓர் ஆளுங்கட்சி பிரமுகர்கள் சொல்வது அபத்தத்திலும் அபத்தம். அவர்கள் நினைத்திருந்தால், முதல்வர், டி.ஜி.பி வரை விஷயத்தைக் கொண்டு சென்றிருக்க முடியும். உடனடியாக, நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், விஷயம் வெளியில் வந்து தங்களது பெயர் அடிபட்ட உடன், தங்களைப் பாதுகாத்துக்கொள்வதிலேயே அ.தி.மு.க-வினர் அதிக கவனம் செலுத்துகின்றனர். மேலும், இந்த வழக்கில் `அ.தி.மு.க-வைச் சேர்ந்த நாகராஜ் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகியும், அப்போதே ஏன் அவரை கட்சியிலிருந்து நீக்கவில்லை?’ என்ற கேள்வியை அவ்வளவு எளிதில் கடந்து சென்று விட முடியாது.

அதேபோல, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு கைது செய்யப்படுவதற்கு முன்பு, வெளியிட்ட ஓர் ஆடியோவில், ``இந்த வழக்கில் பல முக்கிய பிரமுகர்களுக்குத் தொடர்பு இருக்கிறது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் எனக்குத் துணையாக இருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். பொள்ளாச்சி அளவில் தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தாலும், மு.க. ஸ்டாலின் அறிக்கை விட்டது நேற்றுதான். பொள்ளாச்சி தி.மு.க இத்தனை நாள்களாக, ஏன் இதை மு.க.ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு செல்லவில்லை?

ஏழாண்டுகளாக இவர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டு வருவதாகப் போலீஸ் தரப்பில் கூறுகின்றனர். இத்தனை நாள்களாக ஒருவர்கூடவா புகார் கொடுக்கவில்லை... உண்மையில் புகார்கொடுக்கவில்லையா அல்லது புகாரை இவர்கள் ஏற்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

கோவை போலீஸ் எஸ்.பி-யின் பேட்டியிலும் நிறைய சந்தேகங்கள் உள்ளன. கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் 2012-ம் ஆண்டிலிருந்தே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 200 பெண்கள், 50 வீடியோக்கள் என்று லோக்கல் போலீஸார் கூறினர். 2012-ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பாண்டியராஜன், “நான்கு வீடியோக்கள்தான். அனைத்துமே சமீபத்தில் எடுக்கப்பட்டவை” என்கின்றார்.

“பாதிக்கப்பட்டவர்களே இந்த வழக்கில் பலரது பெயர்கள் விடுபட்டுள்ளன. அரசியல் தலையீடு இருக்கிறது” என்று கூறுகின்றனர். பாண்டியராஜனோ, “கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேரைத் தவிர, வேறு யாருக்கும் தொடர்பில்லை. அரசியல் தலையீடு இல்லை. 100 சதவிகிதம் அரசியல் வாரிகளுக்குத் தொடர்பில்லை” என்று அழுத்தமாகச் சொல்கிறார்.

இந்த வழக்கில் இவர்களைத் தவிர, வேறு யாருக்கும் சம்பந்தம் இல்லை என்பதை உறுதியாகச் சொல்லும், பாண்டியராஜன், எவ்வளவு பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பணம், நகை பறிப்பு தொடர்பாக எந்த விவரங்களையும் சொல்லவில்லை. இதில், வைத்தே இந்த வழக்கு எந்த அளவுக்கு விசாரிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில், அவர் சற்று நீளமாகச் சொன்ன தகவல், ‘அரசியல் தலையீடு இல்லை’ என்பது மட்டும்தான். செய்தியாளர்களின் மற்ற கேள்விகளுக்குப் பெரும்பாலும் ஒற்றை வார்த்தைகளில்தான் பாண்டியராஜன் பதில் அளித்தார். இப்படி, பல்வேறு சந்தேகங்கள் இருக்கும்போது, எதற்காக அவசர அவசரமாகக் குற்றவாளிகள் மீது குண்டாஸ் போடப்படுகிறது. இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த விஷயமும் வெளிவரக் கூடாது என்பதற்காகவா?

இந்தச் சந்தேகங்களுக்கு எல்லாம் விளக்கம் அளிக்காமல், இவர்கள் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வார்களேயானால், மக்கள் தங்களது வாக்குகளால் நிச்சயம் பதிலடி கொடுப்பார்கள் என்பது நிச்சயம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.