பாகிஸ்தான் பெயரைக் குறிப்பிடாத சுஷ்மா!

சர்வதேச அளவில் பயங்கரவாதமும், அதற்குப் பலியாவோர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்று இஸ்லாமியக் கூட்டுறவு கூட்டமைப்பில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியக் கூட்டுறவு கூட்டமைப்பு என்பது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், ஈராக், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட 57 நாடுகளின் கூட்டமைப்பாகும். இந்தகூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு அபுதாபியில் இன்று (மார்ச் 1) நடைபெற்றது.
இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். இஸ்லாமியக் கூட்டுறவு கூட்டமைப்பு மாநாட்டிற்கு இந்தியா அழைக்கப்படுவது இதுவே முதல்முறை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவிற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. இதை ஏற்க மறுத்தது இஸ்லாமியக் கூட்டுறவு கூட்டமைப்பு.
இதனால், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி இந்த மாநாட்டில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளார். மேலும், இஸ்லாமியக் கூட்டுறவு கூட்டமைப்பில் இந்தியாவுக்குப் பார்வையாளர் அந்தஸ்து வழங்க யாரேனும் முயற்சி செய்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 18.5 கோடி முஸ்லிம்கள் உட்பட 130 கோடி இந்தியர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகக் கூறினார்.
“முஸ்லிம் சகோதர, சகோதரிகள் இந்தியாவின் பன்முகத்தன்மையின் ஒரு அங்கமாக விளங்குகிறார்கள். இந்தியாவில் தீவிரவாதப் பிரச்சாரத்திற்கு மிகக் குறைவான இஸ்லாமியர்களே இரையாகியுள்ளனர். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் வெவ்வேறு பெயர்களையும் அடையாளங்களையும் தாங்கி நிற்கின்றன. இதனுடைய நோக்கங்கள் வேறுபடலாம். ஆனால், இரண்டுமே மதத்தின் பெயரால் தவறான வழிநடத்துதல் மூலம் வெற்றி அடைய வேண்டும் என்ற அடிப்படையில்தான் செயல்படுகின்றன.
இஸ்லாம் என்ற வார்த்தைக்கு அமைதி என்பது அர்த்தம் எனில், அல்லாவின் மற்ற 99 பெயர்களின் அர்த்தம் வன்முறை என்பது அர்த்தமல்ல. ஒவ்வொரு மதமும் சமாதானம், அமைதி, அன்பு, சகோதரத்துவம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன” என்று கூறினார் சுஷ்மா ஸ்வராஜ்.
இஸ்லாமிய நாடுகளுடன் இந்தியாவுக்கு நெருங்கிய உறவு உள்ளதாகவும், இந்தியப் பொருட்களின் முக்கியச் சந்தையாக வளைகுடா நாடுகள் திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்திய தனது எரிசக்தி தேவைக்கு வளைகுடா நாடுகளைச் சார்ந்துள்ளது. இந்திய வளர்ச்சியோடு வளைகுடா நாடுகள் உடனான அரசியல் உறவும் வளர்ந்து வருவதாகத் தெரிவித்தார் சுஷ்மா ஸ்வராஜ். உலகின் பொருளாதார வல்லரசுகளாக ஆசிய நாடுகள் வளர்ச்சி பெற்று வருவதாகக் கூறினார்.
சுஷ்மா ஸ்வராஜ் 17 நிமிடங்கள் பேசினாலும், தனது பேச்சில் ஓரிடத்தில் கூட பாகிஸ்தான் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.