ஜெனிவா தேனீர் கடைகளில் பேசுகின்ற விடயங்கள் ஓர் ஆரம்பமே அன்றி முடிவல்ல!

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்து பிரச்சினைக்கு தீர்வு காணும் பணியை முதற் கட்டமாக ஆரம்பிக்கலாமென்ற விடயத்தை நாம் தேசிய அரசியல் நீரோட்டத்திற்கு வந்த காலம் முதல் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றோமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.



இச்செயற்பாடானது ஓர் ஆரம்பமே அன்றி, முடிவல்ல. இதையே இந்தியாவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இம்முறை ஜெனீவா கூட்டத் தொடரிலும் இந்தியா அதனையே வலியுறுத்தியிருக்கின்றது. அந்த வகையில் இந்தியா இந்த விடயத்தில் தனது கடப்பாட்டினை ஒழுங்குற நிறைவேற்றியிருப்பதையிட்டு, எமது மக்கள் சார்பாக இந்திய அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆரம்பக் கைத்தொழில், சமூக வலுவூட்டல் அமைச்சு, பொது வழங்கல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு, விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து போசிய அவர், தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜெனீவாவில் பிரதான பொதுச் சபையில் கலந்து கொள்ள முடியாமல் ஜெனீவா தேனீர் கடைகளில் சந்திப்புக்களை நடத்தியும், கலந்துரையாடல்களை நடத்தியும் காலத்தை வீணடிக்கிறார்கள். ஆனால் தமிழ் மக்களுக்காக எதையோ சாதித்து விட்டதாக தம்பட்டம் அடித்து விட்டு நாடு திரும்புகின்றனர்.

இவர்களின் இந்தப் பயணங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன் ஏதுமில்லை. ஜெனிவா தேனீர் கடைகளில் பேசுகின்ற விடயங்கள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஜெனீவா பொதுச் சபையில் பிரதிபலிக்கச் செய்யாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

யுத்தம் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலைமாற்று நீதியை நிலைநாட்டுவது இந்த நாட்டு அரசின் கடப்பாடாகும். மனமிருந்தால் இடமிருக்கும் என்பார்கள். இந்த நாட்டில் வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பிலான அலுவலகம் அமைப்பதும், இழப்பீட்டு அலுவலகம் அமைப்பதும், விரைவானதாகவும், அர்த்தமுள்ளவகையிலும், பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதாகவும், உண்மைகளைக் கண்டறிவதாகவும் அமையவேண்டும். அழுதும் பிள்ளையை அவளே பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது போல், எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும்.

பொறுப்புக் கூறல் என்ற விடயமானது, இந்த அரசை சார்ந்தது என்கின்றபோது, தற்போது இந்த அரசைக் கொண்டு வந்தவர்களான இந்த அரசை முண்டு கொடுத்துக் கொண்டிருக்கும் கொண்டுள்ளவர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் பொறுப்புமாகும்.

அவர்கள் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி வருகின்றார்கள். வடக்கில் அரசுக்கு கால அவகாசம் கொடுக்கக்கூடாது என்றும், தெற்கில் அரசுக்கும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்றார்கள்.

இவ்வாறு இரட்டைப் போக்கு அரசியலே இவர்களின் வரலாறாகும். அதாவது, ஒரு பக்கத்தில் அரசுடன் இணைந்து இந்தப் பொறுப்புக் கூறல் விடயம் தொடர்பில் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டும் அதற்கான ஆவணங்களைத் தயாரித்துக் கொண்டே, மறுபக்கத்தில் அரசுக்கு எதிராகக் கேள்விகளைக் கேட்பதுபோல் கேள்விகளையும் கேட்டு வருகின்றனர். இதை எமது மக்கள் விளங்கிக் கொண்டு வருகின்றார்கள்.

தமிழ் மக்கள் மத்தியில் அரசுக்கு எச்சரிக்கை விடுப்பதும், சர்வதேச நீதிப் பொறிமுறையும், சர்வதேசத் தலையீடுமே தமிழ் மக்களுக்கு நீதியையும், தீர்வையும் பெற்றுத்தரும் என்று உணர்ச்சிப் பேச்சுப் பேசுவதும், தென் இலங்கையில் அரசுடன் தரகு அரசியல் நடத்துவதும் போலித் தமிழ்த் தேசியம் பேசுவோர் தந்திர அரசியல் என நினைக்கலாம்.

இவ்வாறான இட்டை முகம்கொண்ட அரசியல் செயற்பாடுகளால் தமிழ் மக்களுக்கு எந்த விமோசனமும் கிடைக்கப்போவதில்லை. உள்நாட்டில் உழாத மாடு, ஜெனீவா போய் உழாது என்று ஏற்கனவே நான் கூறியிருந்தேன். நான் கூறியதே இன்று நடந்துள்ளது.

-மகேஸ்வரன் பிரசாத்-

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.