சர்வதேச விசாரணை ஒன்றே எமக்கான தேவை!


இராணுவத்தினரை ஒருபோதும் விசாரணைகளுக்கு உட்படுத்த மாட்டோம்,அவர்களைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த மாட்டோம் எனக் கூறுபவர்களிடம் எவ்வாறு எமக்கான நீதியை எதிர்பார்க்க முடியும்? எனவே ஜெனீவாவில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை தெடார்பிலும் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறித்தும் எம்மால் திருப்தியடைய முடியாது. அதனால் சர்வதேச விசாரணை ஒன்றே எமக்கான தேவை என்பதுடன் எமக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ச்சியாகப் போராடுவோம் என எட்டு மாவட்டங்களுக்கான காணாமல்போனோர் உறவுகள் அமையத்தின் ஒருங்கிணைப்பாளர் கனகரஞ்சனி யோகதாசா தெரிவித்தார். ஐக்கிய நாடுகள்சபை மனித உரிமைகள் பேரவையின் ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான 40(1) பிரேரணை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.  அதன்மூலம் ஏற்கனவே சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்கறுதிகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு இன்னும் இரண்டு வருட காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளமைதொடர்பில் திருப்தி அடைகின்றீர்களா என வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.  இவ்விடயம் குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில் எம்முடைய காணாமல்போன உறவுகளைத் தேடி கடந்த இருவருட காலத்திற்கும் மேலான நாங்கள் தெருவில் இறங்கி தொடர்ச்சியாகப் போராடி வருகின்றோம். எனினும் எவ்வித முன்னேற்றகரமான நகர்வுகளும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை.  இந்நிலையில் தற்போது மேலும் இரண்டு வருடங்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனூடாக தமது கடப்பாடுகளை நிறைவேற்றுவது தொடர்ச்சியாக இழுத்தடிப்புச் செய்யப்பட்டு எப்போதும் எமக்கு நீதி கிடைக்கப்பெறாத நிலையே ஏற்படும். காணாமல்போனோர் அலுவலகம் காலஅவகாசம் வழங்கல் என அனைத்தும் ஏமாற்றும் வகையிலான செயற்பாடுகள் என்றே கருத வேண்டியுள்ளது. புலம்பெயர் உறவுகள் அரசு சாராத அமைப்புக்கள் என அனைத்தும் எம்மை வைத்து தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனரே தவிர தெருவில் போராடும் தாய்மார்கள் குறித்து எவரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. அரசியல்வாதிகள் தேர்தல் நெருங்கும் போது மாத்திரமே எம்மை வந்து சந்திக்கின்றார்கள். இத்தகைய நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக சர்வதேச விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது.  காரணம் இராணுவத்தினரை ஒருபோதும் விசாரணைகளுக்கு உட்படுத்த மாட்டோம் அவர்களைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த மாட்டோம் எனக் கூறுபவர்களிடம் எவ்வாறு எமக்கான நீதியை எதிர்பார்க்க முடியும்?  எனவே சர்வதேச விசாரணை ஒன்றே எமக்கான தேவை என்பதுடன் எமக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ச்சியாகப் போராடுவோம் என்றார்.

No comments

Powered by Blogger.