யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் இலவச குறும்பாட நெறி: இந்தியப் பேராசிரியர்கள் பங்கேற்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியல் பீடமும், இந்தியத் தொழிநுட்ப நிறுவகமும் இணைந்து நடாத்தும்  "உட்கட்டமைப்பு அபிவிருத்தியிற் செயற்கைப் புவியிழையின் பிரயோகம்" எனும் தலைப்பிலான குறும்பாட நெறி எதிர்வரும்- 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் இலவசமாக நடாத்தப்படவுள்ளது.

25 ஆம் திகதி காலை-09 மணி முதல் பிற்பகல்- 04.30 மணி வரையும், 26 ஆம் திகதி முதல் காலை-09 மணி முதல் பிற்பகல்-01.30 மணி வரையும் மேற்படி குறும்பாட நெறி இடம்பெறவுள்ளது.  

இந்தியத் தொழில்நுட்ப நிறுவகத்தைச் சேர்ந்த(IIT) குடிசார் பொறியியல் துறைப் பேராசிரியர்களான ஜி. வி. ரா,  எம். வெங்கட்ராமன் மற்றும் அமிற் பிரசான்ட் ஆகியோர் பாடநெறியின் வளவாளர்களாகச் செயற்படவுள்ளனர். 

குறித்த பாடநெறியின் நோக்கம் பங்கேற்பாளர்களுக்குப் புவிசார் பொருட்கள் வடிவமைப்பு மற்றும் கட்டுமான அடிப்படைகள் ஆகியவற்றை எடுத்துரைப்பதும், சர்வதேச மற்றும் தேசிய சிறந்த நடைமுறைகளை வெளிப்படுத்துவதுமாகும். 

சிக்கனமான, நீண்ட காலம் நிலைக்கக் கூடிய குடிசார் பொறியியற் துறை மற்றும் நீர் வளங்கள் சார்ந்த கட்டமைப்புக்களிற் பலதரப்பட்ட செயற்கைப் புவியிழைகளில் பொறியியலைப் புரிந்து கொள்ளுதல். ஆதாரக் கட்டுமானங்கள், மென்மையான தரை மீதான கட்டுமானங்கள், வடிகால், வடிகட்டுதல், நடைபாதை, அணைகள் மற்றும் கால்வாய்கள் ஆகியவற்றின் வழிகாட்டல், தேவைப்பாடுகளைப் புரிந்து கொள்ளுதல், அவற்றை அமைப்பதற்கான கட்டுமான நடவடிக்கைகளைச் சிறப்பாகத் திட்டமிட்டுச் செவ்வனே மேற்கொள்ளலுமாகும். 


இந்தப் பாடநெறியில் சிரேஷ்ட தொழில் வல்லுனர்கள், கல்வியியலாளர்கள்,  குடிசார் பொறியியற்துறை மாணவர்கள் மற்றும் துறைசார் ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து கொண்டு பயன்பெற முடியும். மேற்படி பாடநெறி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்தின் குடிசார் பொறியியல் துறைத் தலைவர் கலாநிதி- என். சதிபரனின் 0774929868 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
No comments

Powered by Blogger.